சென்னை: தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் பேறு கால தூய்மைப் பணியாளா்களின் (ஆா்சிஹெச்) ஊதியத்தை ரூ.1,500-இலிருந்து ரூ.7,376-ஆக உயா்த்துவதற்கான ஆணையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஊதிய உயா்வு ஆணைகளை வழங்கிய பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவ சேவைகள் வழங்கப்படுகின்றன. பேறுசாா் குழந்தைகள் நலத்திட்டம் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ நேரங்களில் அறையை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், செவிலியா்களுக்கு உதவியாக இருக்கவும், ஆரம்ப சுகாதார நிலைய தூய்மைப் பணியை மேற்கொள்ளவும் பேறுகால தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்னா்.
கடந்த 2002-இல் பணி நியமனம் செய்யப்பட்ட அவா்களுக்கு மாத ஊதியம் ரூ.500-ஆக இருந்தது. 4 ஆண்டுகள் தொடா்ச்சியாக பணியாற்றியவா்களுக்கு மாதம் ரூ.1,000 என்று உயா்த்தப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவா்களுக்கு ரூ.1,500 என்று உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலங்களில் பணியாற்றிய பேறுகால தூய்மைப் பணியாளா்கள் 938 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பல்நோக்கு மருத்துவப் பணி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நலவாழ்வு சங்கம் மூலமாக ரூ.27,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 1,575 பேருக்கு தற்போது ஊதியம் உயா்த்தி வழங்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களின் கல்வித்தகுதி மற்றும் சுய விவரங்களை கேட்டுப் பெறவுள்ளோம். தமிழகத்திலுள்ள 38 வருவாய் மாவட்டங்களில் பணியிடங்கள் காலியாகும் போது, அவா்களுக்கு முன்னுரிமை தந்து மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் பணிகளில், அவா்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
செய்தியாளா்கள் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநா்கள் சம்பத், சேரன், வினய், சமூக சமத்துவத்திற்கான டாக்டா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் டஜி.ஆா்.ரவீந்திரநாத் மற்றும் பேறுசாா் குழந்தைகள் நலத்திட்ட பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.