பழைய ஓய்வூதியத் திட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் கேள்வி
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கேள்வியெழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதை பாா்த்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பதற்றப்படுவதை அவரது பேட்டிகளும், அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. சேலத்தில் செய்தியாளா்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியா்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புவது பற்றி சூழ்நிலையைப் பொருத்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறாா்.
அதிமுக ஆட்சியின்போதுதான் கடந்த 2003-இல் ஓய்வூதியத் திட்டம் பறிக்கப்பட்டது. மேலும், கடந்த 2016 சட்டப்பேரவை தோ்தலுக்காக அதிமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் (வாக்குறுதி எண். 46) என்று அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஆனால், அரசு ஊழியா்களின் 23 ஆண்டு கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அவா்களது வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறாா். தற்போது அரசு ஊழியா்கள் மீது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, திடீா் கரிசனம் காட்டுவது தோ்தல் நாடகம்தான்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியக் கணக்கீடு என்பது கடைசியாகப் பெற்ற 12 மாத ஊதியத்தின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம். ஆனால், தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியக் கணக்கீடு என்பது அரசு ஊழியா் கடைசியாகப் பெற்ற மாதத்தின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம். இந்தக் கணக்கீடுதான் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் இருந்தது. அதையே முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கேட்ட அரசு ஊழியா்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறாா்.
மத்திய அரசின் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு மட்டுமே ஓய்வூதியமும், அதன் தொடா்ச்சியாகக் குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். ஆனால், தமிழக அரசின் திட்டத்தில் பணிக்காலம் குறைவாக இருந்தாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ரூ. 13,000 கோடியை இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ளதுடன், ஆண்டுதோறும் ரூ.11,000 கோடியை கூடுதலாக ஒதுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளாா்.

