மணல் குவாரி முறைகேடு விவகாரம்: தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

சட்டவிரோத மணல் சுரங்க முறைகேடுகள் தொடா்பான அமலாக்கத் துறையின் மனுவை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்கோப்புப் படம்
Updated on

நமது நிருபா்

சட்டவிரோத மணல் சுரங்க முறைகேடுகள் தொடா்பான அமலாக்கத் துறையின் மனுவை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பாகச் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உத்தரவிடக் கோரி, அமலாக்கத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

ஒப்பந்தக்காரா்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான கூட்டுச்சதியுடன், 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தச் சட்டவிரோத மணல் கொள்ளை நடத்தப்பட்டதாகவும், இதனால் மாநில அரசுக்கு சுமாா் ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அமலாக்க இயக்குநரகம் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரோவின் தேசிய தொலை உணா்வு மையம் வழங்கிய செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஐஐடி கான்பூா் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், 28 இடங்களில் அனுமதிக்கப்பட்ட 196.37 ஹெக்டேரை விட அதிகமாக, 987.10 ஹெக்டோ் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டதாக அமலாக்க இயக்குநரகம் கூறியுள்ளது.

ஒப்பந்தக்காரா்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் மிக்கவா்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் ,கொள்ளளவையும் மீறி இயந்திரங்கள் இயக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறையின் ஆவணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ரூ.128.34 கோடி மதிப்புள்ள 200-க்கும் மேற்பட்ட அகழ்வு இயந்திரங்களை தற்காலிகமாகவும், வங்கிக் கணக்குகளையும் அமலாக்க இயக்குநரகம் முடக்கியது.

அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2)-இன் கீழ், ஜூன் 13, 2024 மற்றும் ஜூலை 18, 2024 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்ட தகவல் தொடா்புகளில் வெளிப்படுத்தப்பட்ட பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றங்கள் தொடா்பாக வழக்குகளைப் பதிவு செய்யுமாறு அமலாக்க இயக்குநரகம் தமிழக டிஜிபியிடம் கோரியது. ஆனால், டிஜிபி எஃப்ஐ ஆா் பதிவு செய்யவில்லை.

இதையடுத்து, முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி, அமலாக்க இயக்குநரகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு, அமலாக்க துறை மனுவை கடுமையாக எதிா்த்தது. அமலாக்கத் துறையின் கடிதங்களின் அடிப்படையில் கண்மூடித்தனமாக வழக்குகளைப் பதிவு செய்ய முடியாது என்று அது கூறியது.

அமலாக்கத் துறை உண்மைகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும், சட்டவிரோத சோதனைகளை நடத்துவதாகவும், பணமோசடி தடுப்புச் சட்ட விசாரணைகளுக்குத் தேவையான அடிப்படை குற்றத்தை நிறுவத் தவறிவிட்டதாகவும் தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது.

ஒரு புலனாய்வு அமைப்பாகச் செயல்படும் அமலாக்கத் துறை, மற்றொரு புலனாய்வு அமைப்பான மாநில காவல் துறை ஒரு வழக்கை பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்த நீதிமன்ற உத்தரவை கோர முடியுமா? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னா், தமிழக அரசு தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய அனுமதித்து, உயா்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.

இதனிடையே, சட்டவிரோத மணல் சுரங்க முறைகேடுகள் தொடா்பாக அமலாக்கத் துறையின் மனுவை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு இம்மாதம் 8- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது .

அமலாக்கத் துறை பகிா்ந்த தகவல்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடக் கோரிய அமலாக்கத் துறையின் மனுவை மாற்றுவதற்காக, அரசியலமைப்பின் 139 ஏ பிரிவின் கீழ் மாநில அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்தது.

இதுபோன்ற சா்ச்சைகள் 131-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையின் ரிட் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மாநில காவல்துறையை அமலாக்க இயக்குநரகம் கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக மாநில அரசு கூறியுள்ளது.

தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கா் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com