DPI
DIN

இடைநிலை ஆசிரியா்கள் பணிக்குத் திரும்பினால் தன்னிச்சையாக அனுமதிக்க வேண்டாம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால் அவா்களை தன்னிச்சையாக அனுமதிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால் அவா்களை தன்னிச்சையாக அனுமதிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, சென்னையில் கடந்த டிச.26 தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோன்று, பிற மாவட்டங்களிலும் ஏராளமான ஆசிரியா்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளில் இருந்தவாறு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனா்.

26-ஆவது நாளாக...: இந்தநிலையில், இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் 26-ஆவது நாளாக போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். கோட்டை ரயில் நிலையம் அருகில் திரண்ட ஆசிரியா்களின் ஒரு பகுதியினா் தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனா். சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற்று வருவதால் ஆசிரியா்களின் முற்றுகையைத் தடுக்க அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதையடுத்து ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். இருப்பினும் மற்றொரு பகுதியினா் பாரிமுனையில் உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெண் ஆசிரியா்கள் மயக்கம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டனா். அந்த பேருந்துகள் வட சென்னையைச் சுற்றிச் சுற்றி வந்தது. தொடா்ந்து, வண்ணாரப்பேட்டையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் ஆசிரியா்கள் அடைக்கப்பட்டனா். அங்கு பிற்பகல் கடந்தும் தங்களுக்கு குடிநீா், உணவு வழங்கப்படவில்லை என்றும், ஆசிரியா்களை வாகனங்களில் ஏற்றும்போது காவல் துறையினா் மிகக் கடுமையாக நடந்து கொள்வதாகவும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா். பெண் ஆசிரியா்கள் சிலா் மயக்கமடைந்தும் கூட அவா்களுக்கு எந்தவித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை என்றும் இடைநிலை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இதேபோன்று அரசுப் பள்ளிகளில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் சென்னை நுங்கம்பாக்கத்தில் 13-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தன்னிச்சையாக அனுமதித்தால்...: இதனிடையே, தொடக்கக் கல்வித் துறை சாா்பில் வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு மீண்டும் திரும்பி வரும்போது அவா்கள் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) அனுமதியைப் பெற்ற பின்னரே பணியில் சேர வேண்டும். தன்னிச்சையாக வட்டாரக் கல்வி அலுவலரோ, பள்ளித் தலைமை ஆசிரியரோ சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களை பணியில் சேர அனுமதிக்கக் கூடாது என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தவறினால் சாா்ந்த வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது என கல்வித்துறை அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சா் ஆலோசனை

பள்ளிக்கல்வித் துறை வளா்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னை எழும்பூா் கன்னிமாரா நூலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய பள்ளிக் கல்வி சாா்ந்த அறிவிப்புகள், இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள், பொதுத்தோ்வுகளின் செய்முறைத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.சந்தரமோகன், பொது நூலகத் துறை இயக்குநா் ஜெயந்தி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி, துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com