அறங்காவலர்கள் நியமனம்: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்
திருக்கோயில்களில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்த நிலையில், அதுதொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
நிகழாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், பேரவைக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக விளக்கம் அளித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் 13 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
அதில், தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறங்காவலர் நியமனம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறநிலையத் துறை சார்பில் தற்போது 8,488 திருக்கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 31,163 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டதில் 13,340 திருக்கோயில்களுக்கு வரப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது அந்தந்த மாவட்டக் குழுக்களின் பரிசீலனையில் உள்ளன.
இதர 17,823 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் தொடர்பாக எவ்வித விண்ணப்பமும் பெறப்படவில்லை. பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக 1,551 திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்ய இயலவில்லை.
இதுதொடர்பான வழக்கு விசாரணைகளின்போது உச்சநீதிமன்ற, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்து பாராட்டியுள்ளனர். அனைத்து திருக்கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்க அரசு துரித நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் விண்ணப்பங்கள் வராததே பல திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தாமதமாவதற்கு முக்கிய காரணமாகும்.
சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டு, மாநில வல்லுநர் குழுவால் இதுவரை14,804 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1,000 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாக்கும் வகையில் ரூ.571.55 கோடியில் 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு ரூ.425 கோடி அரசு வழங்கியுள்ளது. இதுவரை 1,000 ஆண்டுகள் பழைமையான 76 திருக்கோயில்கள் உள்பட3,956 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
100 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு காணாத பழமை வாய்ந்த திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியும், பழுதடைந்து ஓடாமல் நின்றிருந்த திருத்தேர்களை மீண்டும் ஓடச்செய்தும், சிதிலமடைந்த திருக்குளங்களைச் சீரமைத்துத் தெப்ப உற்சவங்களை மீட்டெடுத்தும் சாதனை படைத்து வருகிறது இந்த அரசு. தமிழக அரசின் இத்தகைய ஆக்கப் பூர்வமான பணிகளை ஆதீனப் பெருமக்களும் சான்றோர்களும் பாராட்டிவருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

