

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்றுக் கட்சியில் இணைந்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வந்த ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பு மூலம் தனியாக செயல்பட்டு வருகிறார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, இன்று(ஜன. 21) திமுகவில் இணைந்தார்.
முன்னதாக, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் திமுகவிலும் ஜே.சி.டி. பிரபாகர் தவெகவிலும் இணைந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ஓபிஎஸ் காலதாமதப்படுத்துவதால், அவரின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் குன்னம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் குன்னம் ராமச்சந்திரன். 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
இவரைத் தொடர்ந்து, வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.