

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில், அதிமுக, இபிஎஸ் பெயரை டிடிவி தினகரன் கூறாமல் தவிர்த்துவிட்டார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.
இன்று(ஜன. 21) காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அமமுக டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி உருவாகியுள்ளதாக இருவரும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க, எங்களுடைய பங்காளிச் சண்டை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்ப ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முன்னதாக இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்றால் அந்த கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
பேட்டியின்போது முதல்வர் வேட்பாளர் யார்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டிடிவி தினகரன்,
"என்டிஏ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வளவுதான். தமிழ்நாட்டின் நலனுக்கும் கட்சி நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விட்டுக்கொடுத்து எல்லாவற்றையும் மறந்துவிட்டு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மீண்டும் முழு மனதுடன் என்டிஏ கூட்டணிக்கு வந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
டிடிவி தினகரன் பேசும்போது, முழுவதுமாக என்டிஏ கூட்டணி என்றுதான் குறிப்பிட்டார். அதேபோல செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும்போதுகூட அதிமுக, இபிஎஸ் என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.
இதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில்,
"தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திடவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!' என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியும் தனது பதிவில் என்டிஏ கூட்டணி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இறுதியாக டிடிவி தினகரன் எக்ஸ் பதிவில்,
"மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில் அதிமுக, இபிஎஸ் என்று குறிப்பிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றவே டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகவே கூறப்படுகிறது. தேமுதிகவையும் என்டிஏ கூட்டணியில் இணைக்க முயற்சி நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவை இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், ஏற்கெனவே விஜய்யின் தவெகவில் இணைந்தார். டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெகவில் இணைவார்கள் என்று அவர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது டிடிவி தினகரன் இணைந்துள்ளதன் மூலமாக அதிமுக - பாஜக கூட்டணி வலுப்பெற்றுள்ளதாகவே பேசப்படுகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவந்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது எந்த கூட்டணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.