

திமுக ஊழல் ஆட்சியை அகற்ற கூட்டணியில் ஒன்றாக இணைந்திருப்பதாக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.
இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பியூஷ் கோயல்,
"என்டிஏ குடும்பத்துக்கு மீண்டும் வர தினகரன் முடிவு செய்துள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே அவரது திறமை, பங்களிப்பை நான் பார்த்திருக்கிறேன். அன்புமணி, ஜிகே வாசன் ஆகியோரும் கூட்டணியில் இணைந்துள்ளனர். ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
தமிழ் மொழி, கலாசாரம், தமிழர்களின் பெருமைகளுக்கு எதிராக திமுக செயல்படுகிறது. திமுக ஊழல் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட திமுகவினரின் ஊழல் ஆட்சி அகற்றப்படும். தமிழக மக்களின் நலனுக்காக என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். ஊழல் திமுக ஆட்சியை என்டிஏ கூட்டணி அகற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கூட்டணியை வலுவாக்க தினகரன் எங்களுடன் இணைந்துள்ளார். என்டிஏ ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து டிடிவி தினகரன் பேசுகையில்,
"மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மூலமாக தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க எங்களுடைய பங்காளிச் சண்டை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்ப ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இணைந்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் கஞ்சா மாடல் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஆட்சியை அகற்றுவதே எங்கள் நோக்கம்.
வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற எங்கள் தொண்டர்கள் உழைப்பார்கள். 2021 தேர்தலில் அமித் ஷா முயற்சி செய்து முடியாமல் போனதால் உருவான திமுக எனும் திராவக மாடல் ஆட்சியை அகற்ற நாங்கள் கூட்டணியில் இணைந்திருக்கிறோம். வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
முன்னதாக இபிஎஸ்முதல்வர் வேட்பாளர் என்றால் அந்த கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தது பற்றியும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,
"என்டிஏ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டின் நலனுக்கும் கட்சி நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விட்டுக்கொடுத்து எல்லாவற்றையும் மறந்துவிட்டு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மீண்டும் முழு மனதுடன் என்டிஏ கூட்டணிக்கு வந்திருக்கிறேன்" என்றார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவந்த டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.