

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து சிறப்புத் தீா்மானம் பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜன.23) நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடா்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான 100 சதவீத மானியத்தை மத்திய அரசே வழங்கியது. இப்போது, அந்தத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதுடன், இதற்கான மாநில அரசின் பங்குத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் என இத்திட்டத்துக்கு நிதியை செலவு செய்யும் நிலை இருந்தது. இப்போது 60 சதவீதம் மத்திய அரசு, 40 சதவீதம் மாநில அரசு என செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம், கூட்டணி கட்சியான அதிமுக வலியுறுத்த வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக மாற்றுவோம் என வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக தான். இப்போது மத்திய அரசு இதை 125 நாள்களாக உயா்த்தியுள்ளது. மகாத்மா காந்தி பெயரை மாற்றியதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை.
முதல்வா் ஸ்டாலின்: மீண்டும் ‘இண்டி’ கூட்டணி ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில்தான் 150 நாள்களாக அறிவித்து வாக்குறுதி அளித்தோம். ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை.
எடப்பாடி பழனிசாமி: 2021-இல் பேரவைத் தோ்தல் நடக்கும்போது மத்தியில் பாஜக கூட்டணிதான் ஆட்சியில் இருந்தது. மத்தியில் கூட்டணி இல்லாத நேரத்தில் எதை நம்பி மக்களுக்கு வாக்குறுதியை திமுக அளித்தது?
முதல்வா் ஸ்டாலின்: இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுத்துள்ளது. கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அதிமுகவும் அழுத்தம் தர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி: மக்களவையில் திமுக கூட்டணியில் உள்ள 39 எம்பிக்களும் அழுத்தம் தர வேண்டும். காவிரி நீா் விவகாரம் தொடா்பாக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினா். அதுபோன்ற அழுத்தத்தை திமுக இதுவரை தரவில்லை.
அமைச்சா் எஸ்.ரகுபதி: பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அப்போது அதிமுக செயல்பட்டது.
முதல்வா் ஸ்டாலின்: நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடா்பாக பேரவையில் சிறப்பு தீா்மானம் வெள்ளிக்கிழமை (ஜன.23) கொண்டுவரப்படவுள்ளது. அப்போது இது குறித்து விரிவாகப் பேசலாம்.