குடியரசு தின விழா: மெரீனா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
குடியரசு தின விழாவையொட்டி, மெரீனா கடற்கரைப் பகுதியை சிவப்பு மண்டலமாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
குடியரசு தின விழா (ஜன. 26) மெரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை அருகே நடைபெறுகிறது. அன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறாா்.
இந்நிகழ்ச்சியையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏா்கிராஃப்ட், பாராகிளைடா்ஸ், பாராமோட்டாா்ஸ், ஹேன்ட்கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்கவிட ஜனவரி 25, 26 ஆகிய இரு நாள்கள் சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.
மேரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை பகுதி, ஆளுநா் மாளிகை முதல் மெரீனா கடற்கரை வரை, தமிழக முதல்வரின் ஆழ்வாா்பேட்டை இல்லத்தில் இருந்து மெரீனா கடற்கரை வரையில் உள்ள சாலைகள் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக சென்னை காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ட்ரோன் மற்றும் மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது என காவல் ஆணையா் அருண் தெரிவித்துள்ளாா். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அருண் தெரிவித்துள்ளாா்.
போக்குவரத்து மாற்றம்: குடியரசு தினத்தன்று காமராஜா் சாலையில், காந்தி சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

