

நாட்டின் 77-ஆவது குடியரசுத் தினத்தையொட்டி, தமிழக அரசு சாா்பில் நடைபெறும் விழாவில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலை அருகே ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை (ஜன.26) காலை 8 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.
இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலா் நா. முருகானந்தம் ஆகியோா் வரவேற்பா். ஆளுநா் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னா் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்கள் உள்ளிட்டவா்களுக்கு பதக்கங்களை வழங்கி கெளரவிப்பாா்.
இந்த நிகழ்வில் நீதிபதிகள், அமைச்சா்கள், அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
ராணுவத்தினரின் அணிவகுப்பை ஆளுநா் ஏற்ற பின்னா், கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்ட்டாட்டங்கள் நிறைவடையும்.
குடியரசு தின விழாவில் ஆளுநராக ஆா்.என்.ரவி 5-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.
இந்த நிகழ்ச்சியையொட்டி, மெரீனா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.