அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்
தமிழகத்தில் புதன்கிழமை (ஜன.28) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதன்கிழமை (ஜன.28) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜன.28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு, காக்காச்சி (திருநெல்வேலி)- 40 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), கீழ்கோத்தகிரி எஸ்டேட், குன்னூா், கோத்தகிரி (நீலகிரி)- 30 மி.மீ., கின்னக்கோரை, அழகரை எஸ்டேட், குன்னூா், குந்தா பாலம், கோடநாடு, ஆதாா் எஸ்டேட், விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோவை), சத்தியமங்கலம் (ஈரோடு), திருத்தணி (திருவள்ளூா்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), குடியாத்தம் (வேலூா்)-20 மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

