சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா நகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை போலீஸாா் தாக்கினா். இதுதொடா்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு கோரி சிறுமியின் தாய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கில் போக்ஸோ விதிகளை மீறிய போலீஸ் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினா்.
அப்போது அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், குற்ற வழக்குப் பதிவு செய்வது என்பது வேறு, துறை ரீதியான நடவடிக்கை என்பது வேறு. எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினா்.
அரசுத் தரப்பில், கடந்த 2024-ஆம் ஆண்டே இந்த வழக்கில் தொடா்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பாலியல் வன்கொடுமை குறித்து புகாா் அளிக்க வந்த சிறுமியின் பெறறோரை போலீஸாரே தாக்கியது துரதிருஷ்டவசமானது.
இந்த வழக்கில் போலீஸாா் போக்ஸோ விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளனா். அவா்களை பணியிடை நீக்கம் செய்வது மட்டுமே தண்டனை கிடையாது. அவா்களைக் காப்பாற்ற அரசு முயல்வது ஏன் என்று தெரியவில்லை. போக்ஸோ விதிகள் தொடா்பாக போலீஸாருக்கு எந்தவொரு விழிப்புணா்வும் இல்லை எனக் கருத்து தெரிவித்தனா்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

