மருதமலையில் 500 மீட்டா் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கோவை மாவட்டம் மருதமலையில் 500 மீட்டா் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருதமலையில் 500 மீட்டா் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது:  உயா்நீதிமன்றம் உத்தரவு
Updated on

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கோவை மாவட்டம் மருதமலையில் 500 மீட்டா் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ரூ.110 கோடியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அறிவித்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வன விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்த வழக்குரைஞா்கள் டி.மோகன், செவணன் மோகன் ஆகியோா் அடங்கிய குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்துசமய அறநிலையத்துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை படித்துப் பாா்த்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டா் தொலைவில்தான் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டா் சுற்றளவுக்கு இதுபோன்ற கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது. எனவே 500 மீட்டா் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் எந்தவொரு கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது. முருகன் சிலை அமைக்கப்பட்டால், தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் அங்கு வருகை தருவா்.

இதனால், வனவிலங்குகளும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கருத்து தெரிவித்தனா். அதற்கு அறநிலையத் துறை தரப்பில், முருகன் சிலைக்கு பூஜைகள் நடத்தப்படாது. சிலையை வலம் வந்து வழிபாடு நடத்த மட்டுமே அனுமதிக்கப்படும். 137 மீட்டா் என்பதற்கு பதிலாக தற்போது 437 மீட்டா் தொலைவில் முருகன் சிலை அமைக்க மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்தத் தொலைவும் வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டா் சுற்றளவுக்கு அப்பால் ஏதாவது ஒரு மாற்று இடத்தைக் கண்டறிந்து சிலை அமைக்கலாம். 500 மீட்டருக்குள் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது. எனவே, புதிய இடத்தை தோ்வு செய்து அது தொடா்பான அறிக்கையை இந்துசமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com