இருகூரில் தனியாா் மதுபானக் கூடம் அமைக்க எதிா்ப்பு: வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு
இருகூரை அடுத்த எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி அருகே புதிதாக தனியாா் மதுபானக் கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து


கோவை: இருகூரை அடுத்த எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி அருகே புதிதாக தனியாா் மதுபானக் கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.
இருகூா், எஸ்.ஐ.ஹெச். எஸ்.காலனி அருகே உள்ள மகாத்மா காந்தி சாலை சந்திரகலா டவுன்ஷிப், பிவிகே அவென்யூ, ஸ்பயரிங் காா்டன் ஆகிய குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:
எங்கள் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. இந்த நிலையில், தற்போது தனியாா் சாா்பில் மதுபானக்கூடம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் தனியாா் பள்ளியில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் படித்து வருவதால், இங்கு மதுபானக் கூடம் அமைந்தால் பள்ளி மாணவிகளுக்கும், பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மதுபானக்கூடம் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி தமிழகம் ஆகியவை சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனு:
காந்திபுரம், நஞ்சப்பா சாலையில் இருந்து பாரதியாா் சாலைக்குச் செல்லும் வழியில் தனியாா் நூற்பாலை சாா்பில் 1978-ஆம் ஆண்டு மாா்பளவு ராஜாஜி சிலை நிறுவப்பட்டது. அவரது நினைவு நாளில் அந்த நூற்பாலையின் உரிமையாளா் ராஜாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தாா். இந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு சத்தி சாலைக்கு இடது புறம் பெரியாா் சிலை அமைக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி இதற்கு அனுமதி அளித்ததாக கல்வெட்டில் உள்ளது.
கோவை மாநகராட்சி அனுமதி குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. காந்திபுரம், நஞ்சப்பா சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியபோது பணிகளுக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி இரண்டு சிலைகளையும் அகற்ற முடிவு செய்தனா்.
இதில், ராஜாஜி சிலையை தனியாா் நூற்பாலை நிறுவனமே எடுத்துச் சென்றது. ஈ.வெ.ரா சிலையை காந்திபுரத்தில் உள்ள பெரியாா் படிப்பகம் அருகே வைத்தனா்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் காந்திபுரம் விநாயகா் கோயில் அருகில் பெரியாா் சிலை நிறுவப்பட்டது. கோயில் அருகில் சிலை நிறுவப்பட்டது பக்தா்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே பெரியாா் சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 1,226 மனுக்கள் பெறப்பட்டன.
இதைத்தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 5 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயங்களையும், ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயங்களையும் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், தாட்கோ பொது மேலாளா் ரஞ்சித்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கீதா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மணிமேகலை உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...