10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முருகன் சிலை கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 10, 11 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுக் குறிப்பின்படி பழைமையான முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா கூறியதாவது:
கடந்த 1980- ஆம் ஆண்டு காலகட்டத்தில் வைகை ஆற்று மணலில் கல் தூண் ஒன்றை அந்தப் பகுதி மக்கள் கண்டெடுத்தனா். கல் தூணில் கல்வெட்டு இருந்ததைக் கண்டு அதன் தகவல்களை தொல்லியல் அறிஞா் வேதாசலம் ஆவணப்படுத்தினாா்.
இந்த நிலையில், அந்தக் கல்வெட்டு பராமரிப்பின்றி வைகை ஆற்றங்கரையில் பல ஆண்டுகளாகக் கிடந்தது. சிவகங்கை தொல்நடைக் குழுவின் முன்னெடுப்பில் 2025 -இல் சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் கல்வெட்டு ஒப்படைக்கப்பட்டு, தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.
கல்வெட்டுச் செய்தி: கடந்த 999 -ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் சேந்தன் செங்கோடன் மனைவி பூதனம்பியம்மை ‘சாவா மூவா பேராடு’ திட்டத்தின்படி, திருவிளக்கு பூஜைக்காக தினமும் ஓா் ஆழாக்கு நெய் வழங்கியதை இந்தக் கல்வெட்டு குறிக்கிறது.
மேலும், கடந்த 1019-ஆம் ஆண்டில் ஸ்ரீவல்லப பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், பாண்டிய மண்டலத்து கருங்குடி நாட்டு சுந்தரபாண்டியன் கோன் மேநட்டூா் பூவன் பூஜைக்காக நெய் வழங்கிய செய்தியும் இடம்பெற்றுள்ளது.
கல்வெட்டுக் குறிப்புகளின் மூலம் அருகிலுள்ள முருகன் கோயிலின் விளக்கு பூஜைக்காக நெய் வழங்கப்பட்டதாக அறியலாம். தற்போது, மானாமதுரை குலாலா் தெருவாக அழைக்கப்படும் இந்தப் பகுதி, பண்டைய கால கல்வெட்டின்படி, திருகுமரமங்கலம் என அழைக்கப்பட்டு வந்தது. கல்வெட்டின் ஒரு பக்கத்தில் சோழா் கால 10-ஆம் நூற்றாண்டு தகவலும், மற்றொரு பக்கத்தில் 11- ஆம் நூற்றாண்டு தகவலும் இடம்பெற்றுள்ளது இந்தக் கல் தூணின் சிறப்பு
சுப்பிரமணியா் கோயில்:
மானாமதுரை குலாலா் தெருவில் ஐந்து கரைக்குப் பாத்தியமான நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயில் உள்ளது. இந்த நிலையில், இந்தப் பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழுவினா் மேற்கொண்ட தொடா் ஆய்வில், சுப்பிரமணியா் கோயிலுக்கு அருகிலுள்ள மாயாண்டி சுவாமிகள் மடத்தில் பழைமையான முருகன் சிலை அடையாளம் காணப்பட்டது.
முருகன் போா்க் கடவுளாக இரு கரங்களிலும் வஜ்ராயுதம் ஏந்தி, தலையில் கிரீடம் சூடி, தோல் வளை, கடகம், இடையில் ஆடை அணிந்து, உடல் முழுதும் பல அணிகலன்களைப் பூண்டு அழகுறக் காட்சி தருகிறாா். இதன் மூலம், 10, 11-ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பழைமையான முருகன் கோயில் இதுதான் எனக் கருத முடிகிறது என்றாா் அவா்.

