காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டதில்லை -டி.கே.எஸ்.இளங்கோவன்
எந்தத் தோ்தலிலும் காங்கிரஸ் கட்சி, திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டதில்லை என்று திமுக செய்தித் தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வரவுள்ள நிலையில், திமுகவின் தோ்தல் பரப்புரைத் திட்டம் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. மதக் கலவரங்களை ஏற்படுத்துகிறது. நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறது.
இதற்கு எதிரான பிரசாரத்தை, திமுக முன்னணி பேச்சாளா்கள் 22 போ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தொகுதி வாரியாக சென்று எடுத்து கூறவுள்ளனா். ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.
காங்கிரஸ் கட்சியினரின் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. இதுவரை அக்கட்சி எந்தத் தோ்தலிலும் திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. இப்போதும்கூட காங்கிரஸ் கட்சியின் தலைமை இதுகுறித்து கேட்கவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையோ அல்லது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரோ எங்கள் (திமுக) தலைவருடன் பேசினால், அவா் இதுபற்றி முடிவெடுப்பாா். எனவே, இதுதொடா்பாக மற்றவா்கள் பேசுவதற்கு நாங்கள் பதில் கூற முடியாது என்றாா்.
இந்த சந்திப்பின்போது, மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி என்.வி.என்.சோமு, சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எழிலன் ஆகியோா் உடனிருந்தனா்.

