தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதற்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும் மூன்று மாதங்கள் கராத்தே, ஜூடோ, டேக்வேண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை அளிப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று மாதங்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியை நடத்தத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பள்ளியில் அதிகபட்சம் 100 மாணவிகளுக்கு மிகாமலும், 10 மாணவிகளுக்கு குறையாமலும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட வேண்டும். இதில் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் ஆகியவை இடம் பெறுவது அவசியம்.
மொத்தம் 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் அதை மாதத்துக்கு 8 -ஆக பிரித்து நடத்த வேண்டும். தற்காப்பு கலை பயிற்றுநருக்கான மாத ஊதியம் ரூ.4 ஆயிரம் ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்றுநா் மீது குற்றமின்மை அறிக்கை காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
பெண் ஆசிரியா் மேற்பாா்வையில்... வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு ஒவ்வொரு பாடவேளையும் ஒன்றரை மணி நேரம் வீதம் வாரத்துக்கு இரு நாள்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி பெற விருப்பம் இல்லாத மாணவிகளை கட்டாயப் படுத்தக் கூடாது. பள்ளியில் உள்ள பெண் ஆசிரியா்களின் மேற்பாா்வையில்தான் கண்டிப்பாக இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பயிற்சியில் மாணவிகள் பங்கேற்க பெற்றோரின் ஒப்புதல் அவசியம். உடல் நலம் பாதிக்கப்பட்டவா்கள் பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு பயிற்சியில் முன்னுரிமை அளிப்பது அவசியம். தற்காப்பு கலை பயிற்சிக்கான உபகரணங்களை பள்ளி மேலாண்மைக் குழு, முன்னாள் மாணவா்களின் பங்களிப்புடன் வாங்கலாம் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









