ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து, மேலும் படிப்பைத் தொடர முடியாமல் பட்டுத் தறியில் வேலை செய்தவர் இளையராஜா. இன்று அவர் பட்டுக்கோட்டையில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் தனது வெற்றிப் பயணம் குறித்து கூறியது:
'எனது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், மேலச்சேரி. எனது குடும்பம் விவசாயக் குடும்பம். வறுமையின் பிடியில் இருந்தது. எனக்கு ஒரு தமக்கை. ஒரு அண்ணன். அவர்கள் மூன்றாம் வகுப்பைத் தாண்டவில்லை. வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். நான் மட்டும் உள்ளூர் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படிக்க முடிந்தது.
வேலை தேடி பெற்றோர் காஞ்சிபுரத்தில் குடியேறினர். நானும் பட்டுத்தறி நெசவு வேலையில் குழந்தைத் தொழிலாளியானேன். அப்போது அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் இறையன்பு. பள்ளிப் படிப்பு தொடர முடியாத சிறார்கள் படிப்பதற்காக மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை நடக்கும் 'நிலவொளி' பள்ளிகளை அரசுப் பள்ளிகளில் அவர் தொடங்கியிருந்தார். அங்கு படித்து, 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.
தேர்வுகள் எழுதுவதற்கு முன் பத்து நாள்கள் வேலைக்குச் செல்ல மாட்டேன். படித்து முன்னேற வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. 'நிலவொளி' பள்ளி இல்லாமல் இருந்திருந்தால், எனது வாழ்க்கையில் விடியல் ஏற்பட்டிருக்காது. இன்றைக்கும் பட்டுத் தறி தொழிலாளியாகவே இருந்திருப்பேன். 'நிலவொளி' பள்ளியால் இறையன்புவின் அறிமுகம் கிடைக்க, அந்த நட்பு தொடர்கிறது.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், தொலைதூர பட்டப்படிப்பில் பி.காம். படித்தேன். வெளிநாட்டு அலைப்பேசி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இரவு நேர வேலை கிடைத்தது. பகலில் ஓய்வுக்காகத் தூங்க வேண்டிய கட்டாயம். கிடைத்த நேரத்தில் படித்து பி.காம். முடித்தேன். ஏதாவது அரசு வேலையில் அமர்ந்துவிட தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். தேர்வை எழுதி காவலராகத் தேர்வு பெற்றாலும், அந்த வேலையில் சேரவில்லை.2010-இல் கிராம நிர்வாக அலுவலர் வேலை கிடைக்க, திருக்கழுக்குன்றம் வள்ளிக்குளத்தில் பணியில் சேர்ந்தேன். 2012-இல் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு தலைமைச் செயலகத்தில் பணியில் சேர்ந்தேன்.
தொலைதூரக் கல்வி முறையில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். ஓய்வு நேரத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தி வந்தேன். தேர்வுகளை மீண்டும் மீண்டும் எழுதினேன். தமிழ்நாடு அரசு காவல் துறையில் உதவி கண்காணிப்பாளராக நியமனம் பெற்றேன். இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு பட்டுக்கோட்டையில் பொறுப்பை ஏற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன.
பலமுறை போட்டித் தேர்வுகளில் வெற்றியைத் தவறவிட்டுள்ளேன். தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து வென்றேன். பயணத்தில் பல தடைகள், சிரமங்கள் வரும். தடையைக் காரணம் காட்டி பயணத்தை நிறுத்திவிடக்கூடாது. கிடைத்த வேலையுடன் திருப்தி அடையவும் கூடாது. தொடர்ந்து முயன்றால் இலக்கை நிச்சயம் அடைய முடியும்.
சில ஆண்டுகள் சிரமப்பட்டு படித்தால் பல ஆண்டுகள் பணி பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்புடன் சமூகத்தில் அந்தஸ்துடன் நிம்மதியாக வாழலாம். 'முனைவர் இறையன்பு பயிலகம்' என்ற வாட்ஸ் அப் குழு மூலம் போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு வழிகாட்டி வருகிறேன்'' என்கிறார் இளையராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி நண்பா் குறித்து மாணவா்கள் கட்டுரை எழுதலாம்: கல்வித் துறை தகவல்

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

பள்ளி மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆகஸ்ட் முதல் தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK


