கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களிலிருந்து மணல் எடுத்து அதிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தின் அனுமதி தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அரிய மணல் ஆலை (ஐய்க்ண்ஹய் தஹழ்ங் உஹழ்ற்ட்ள் கண்ம்ண்ற்ங்க்) செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கடந்த 1910-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் விஞ்ஞானி ஹெர் ஸ்கோம்பெர்க் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலையின் மூலம் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் உள்ள மணலில் நிறைந்து கிடக்கும் மோனோசைட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மணவாளக்குறிச்சி கடற்கரை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மணலில் தேங்கியிருந்த மோனோசைட் கனிமம் பல்வேறு பிரிட்டிஷ் நிறுவனங்களால் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் 1952-ஆம் ஆண்டு கேரள மாநிலம், உத்யோக மண்டலில் அமைக்கப்பட்ட அரிய மணல் ஆலை, அணு சக்தி நிலையத் தலைவர் ஹோமிபாபா முன்னிலையில், அன்றைய பிரதமர் நேருவால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் 1965-ஆம் ஆண்டு மத்திய அரசின் உடைமையாக்கப்பட்டு இந்திய அரிய மணல் ஆலை என்று பெயரிடப்பட்டு தனது செயல்பாட்டை தொடங்கியது. இந்நிறுவனம் குமரி மாவட்டத்தில் சின்னவிளை, பெரியவிளை ஆகிய 2 மீனவ கிராமங்களில் கடற்கரை மணலில் இருந்து இலிமினேட், ரூட்டைல், சிர்கான், கார்னெட், மோனோசைட், சிலிமனைட் போன்ற அணுசக்தி தாதுக்களை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
மேலும், மணவாளக்குறிச்சியின் சுற்றுவட்டார பகுதியிலுள்ள நிலங்களிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
விரிவாக்கம்
இந்நிலையில், அரிய மணல் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு, கிள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு வரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் சுமார் 1800 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அணுசக்தித் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த அப்போதைய தமிழக அரசு 1,144 ஹெக்டேர் நிலத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த நிலங்களை அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து கடந்த 2021-ஆம் ஆண்டில் மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டால் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வளம் பாதிக்கும், கடல் அரிப்பு ஏற்படும் என்று மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2024-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மீனவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியது.
அனுமதி நீட்டிப்பு
இதற்கிடையில் மத்திய அரசால் கடந்த 2021-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2026-ஆம் ஆண்டு நிறைவடைந்துவிடும் என்று மீனவர்கள் எண்ணியிருந்த நேரத்தில், கடந்த மாதம் (ஜூன்) 10-ஆம் தேதி அணுக்கனிம சுரங்கத் திட்டப் பணிக்கு மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மீனவர்கள் மற்றும் கடலோர கிராமப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க தலைவர் அருளானந்தன் கூறும்போது, இந்தத் திட்டத்தை தொடக்கத்திலிருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம். இந்தத் திட்டம், 1,144 ஹெக்டேரில் அதாவது 2,827 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் குறும்பனை முதல் நீரோடி வரையுள்ள 8 வருவாய் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
இது தொடர்பாக எங்கள் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் 2024-ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, கடந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களை அழைத்துப் பேசி, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று உறுதியளித்தார். அவ்வாறு அப்போது மூடப்பட்ட பிரச்னையை தற்போதைய தமிழக அரசு மீண்டும் கையிலெடுத்துள்ளது. கடலோர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு என்றார் அவர்.
இது குறித்து, அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் குறும்பனை பெர்லின் கூறியதாவது: இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2024-ஆம் ஆண்டு நாங்கள் போராடியபோது தற்போதைய ஆளும்கட்சியான தவெகவின் சார்பில் எங்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிப் போராடினார்கள். அதே போல் 2024-ஆம் ஆண்டு தவெக செயற்குழுக் கூட்டத்திலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடல் அழிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தவெக ஒருபோதும் ஏற்காது என்று கூறினார்கள். ஆனால், ஆளும்கட்சியாக வந்தவுடன் தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது கடலில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மணலை அள்ளுவார்கள், இதனால் கடல் அரிப்பு பிரச்னை பெரிதாகும், நிலத்தடி நீர் உப்பாக மாறும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், மணலில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும்போது ஏற்படும் கதிர்வீச்சால் சுவாச பிரச்னை, தோல் நோய், புற்றுநோய் பாதிப்பு சிறுநீரகப் பாதிப்பு, ஆஸ்துமா, கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் திட்ட விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்துள்ள அரசாணையை முதல்வர் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

என். செல்வராஜன் - கோப்புப் படம்
இது குறித்து மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை தலைமைப் பொது மேலாளர் என். செல்வராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மத்திய அரசால் அரிய மணல் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலோ, பொதுப் பயன்பாட்டில் உள்ள பகுதிகளிலோ மற்றும் தனிநபர் வசிக்கும் பகுதிகளிலோ எந்தக் காரணத்தை முன்னிட்டும் அரிய வகை கனிமங்கள் எடுக்கப்படமாட்டாது. காலியாக உள்ள நிலத்தில் அந்தந்த இடத்தின் உரிமையாளர்களின் விருப்பம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையில் மட்டுமே அரியவகை கனிமங்கள் எடுக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் குடியிருப்புப் பகுதிகளில் இருப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள்.
நில உரிமையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குத்தகைக்கு நிலம் அளிக்க சம்மதம் தெரிவிக்கும் நில உரிமையாளர்களுடன் குறுகிய கால ஒப்பந்தம் மூலம் அரிய வகை கனிமங்கள் எடுக்கப்பட்டு அந்த இடத்தில் கனிமங்கள் நீக்கிய மணலை இட்டு நிரப்பி உரிய குத்தகை தொகையுடன் மீண்டும் அந்த இடம் தொடர்புடைய உரிமையாளரிடமே ஒப்படைக்கப்படும். நில உரிமையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதன்மூலம் மக்களின் வாழ்க்கைத்தரமும், பொருளாதாரமும் மேம்படும்.
அனுமதிக்கப்பட்ட 1,144 ஹெக்டேரில் வரும் கடற்கரையில் அரிய வகை மணல் எடுக்கப்படாது, உள் நிலப்பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மட்டுமே அரிய வகை கனிம மணல் எடுக்கப்படும். அரிய வகை மணல் எடுப்பதன்மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுவதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். அரிய வகை மணல் எடுக்கும் முறையானது மற்ற கனிமங்களை (நிலக்கரி, சுண்ணாம்புக்கல், இரும்புத்தாது) எடுக்கும் முறைகளான துளையிட்டோ, அதன்பிறகு வெடிமருந்து மூலம் வெடிக்கச் செய்தோ எடுப்பது போல் அல்லாமல் எளியமுறையில் வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டுவது போல் பொக்லைன் இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கோ, சுற்றுப்புற பகுதிகளுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
கதிர்வீச்சு உண்டாகக்கூடிய கனிமம் எடுக்கப்பட்டு அந்த இடத்தில் அரிய வகை கனிமங்கள் நீக்கிய மணல் இட்டு நிரப்பப்படுகிறது. இதன்மூலம் கனிமம் எடுக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே இயற்கையாகவே இருந்த கதிர்வீச்சின் அளவு 8 முதல் 10 மடங்கு வரை குறைக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மணல் எடுக்கப்பட்ட பகுதி மீண்டும் முழுவதுமாக நிரப்பப்படுவதால் அந்த இடம் எல்லாவித பயன்பாட்டுக்கும் குறிப்பாக தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்ப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் உகந்ததாக அமையும். எனவே, உண்மை நிலையை அறியாமல் சில தவறான கருத்துகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றார் அவர்.
தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்...
அணுக் கனிம சுரங்கத் திட்டம் அமைந்தால் மிடாலம், கீழ்மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோரக் கிராம மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம், கடலோரச் சூழல் ஆகியவை கடுமையாகப் பாதிக்கும்.
-அமைச்சர் செ.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்)
3.11.2024-இல் நடைபெற்ற தவெக செயற்குழு தீர்மானத்தில் அணுக் கனிம சுரங்கத் திட்டத்தை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் எனக் குறிப்பிட்டு, கைவிட வலியுறுத்தப்பட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாசகாரத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் திட்டமாக மாறிவிட்டதா?
-எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச் செயலர்)
மிகவும் ஆபத்தான மத்திய அரசின் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை கைவிடக் கோரி தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு தற்போது அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென்மாவட்ட மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
-கனிமொழி எம்.பி. (திமுக துணைப் பொதுச் செயலர்)
அணுக் கனிம சுரங்கத்துக்கான அனுமதியை மாநில அரசு நீட்டித்திருப்பது மிகத் தவறான நடவடிக்கை. கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த அனுமதியை நீட்டித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
-பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர்)
அணுக்கனிம சுரங்கத் திட்டத்துக்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை வருத்தத்தை அளிக்கிறது. இது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல; கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் அரசியல் முடிவாகும்.
-மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்)
இந்தத் திட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும். இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு திட்டத்துக்கு தமிழக அரசு துணை போவதை ஏற்க முடியாது.
-அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்)
அணுக்கனிம சுரங்கத் திட்டத்தால் உருவாகும் கதிரியக்கம் மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், கடல்நீரின் தன்மை மாறுவதோடு மீன் மற்றும் கடலோர உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
-சீமான் (நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்)
Summary
Activists oppose beach sand mining! What is the issue...? Why the opposition...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுக: இந்தியக் கம்யூனிஸ்ட்

அணுக் கனிமச் சுரங்கத் திட்டம்: அரசாணையை திரும்பப் பெறக் கோரி முதல்வரிடம் காங்கிரஸ் அமைச்சா் மனு

அணுக் கனிம சுரங்க காலக்கெடு நீட்டிப்பு ஆணையை ரத்துசெய்யாவிட்டால் போராட்டம்: திமுக எச்சரிக்கை





