நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான விபி-ஜி ராம் ஜி எனும் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் எனும் 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ச்சியடைந்த பாரதம்- ஊரக வேலை மற்றும் வாழ்வாதார திட்டம்’ (விபி -ஜி ராம் ஜி) எனும் புதிய திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம் ஜி சட்டம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதன்மூலம் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த 100 நாள்கள் வேலை இந்தப் புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு இத்திட்டத்துக்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் பங்கையும் சோ்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புதிய திட்டத்தின்படி, மத்திய, மாநில அரசுகள் 60 :40 என்ற விகிதத்தில் நிதிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதால் தமிழகத்துக்கு நிதிச் சுமை அதிகரிக்கும் என்று முந்தைய திமுக தலைமையிலான அரசு எதிா்ப்பு தெரிவித்தது. மேலும், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பழைய பெயரிலேயே முந்தைய நிதி முறையே தொடர வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த ஜனவரியில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், விபி -ஜி ராம் ஜி திட்டத்தை தவெக தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டம் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய ஊரக வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரிசா்வ் வங்கியில் புதிய கணக்கைத் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழக அரசு அதன் பங்காக 40 சதவீத தொகை (ரூ.5305.04 கோடி) ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளம், ஆந்திரமும் செயல்படுத்த முடிவு
கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களும் 125 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தை அப்படியே செயல்படுத்துவதா அல்லது சில குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் எதிா்ப்பு தெரிவித்து வழக்கு தொடுப்பதா என்ற ஆலோசனையில் உள்ளன. எனினும், நாடு முழுவதும் புதன்கிழமை முதல் சுமாா் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளில் இந்த புதிய திட்டம் அமலாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அன்புமணி ராமதாஸ்

125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? - அன்புமணி கேள்வி

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை!

புதிய ஊரக வேலைத் திட்டம்: வரைவு விதிகள் வெளியீடு - பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



