உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

உணவு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!

உணவு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளது குறித்து...

News image

நரேந்திர மோடி / சி. ஜோசப் விஜய் - கோப்புப் படங்கள்

Updated On :6 ஜூலை 2026, 7:27 pm IST

உணவு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை,2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவு, 2013-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் மூலமாகத் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை மாற்றுவதற்கு வகை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நடைமுறையின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மொத்தம் 35 கிலோ கிராம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படவுள்ளது.

உள்-வகைப்பாடுகளுக்கிடையே நிலவும் சமத்துவமின்மையைக் களைவதும், ஊட்டச்சத்துத் தேவைகளுக்கேற்ப உணவுப் பொருள் உரிமைகளை மிகச் சரியாக ஒழுங்குபடுத்துவதுமே இத்திருத்தத்தின் நோக்கம்.

தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், இத்திருத்தம், மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்குச் சென்றடையும் உணவு தானியங்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கும்.

தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன என்றும், இதன்மூலம் 69,26,983 ஏழைப் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இதில், விதவைகள் மாற்றுத்திறனாளிகள், வயதான மாற்றுத்திறனாளிகள், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு நிலையான வருமானம் இல்லாத அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோர் தலைமையில் செயல்படும் குடும்பங்கள், பழங்குடியினக் குடும்பங்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் அடங்குவர்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், மிக வறுமையில் வாடும் ஏழைமக்களின் இறுதிச் சட்டப் பாதுகாப்பிற்கான ஒரு நடவடிக்கையாகவே நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு குடும்பத்திற்கும் போதிய அளவில் உணவு தானியங்கள் கிடைக்காமல் போய்விடவோ அல்லது பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே, இதன் உரிமைகள் திட்டமிட்டே எளிமையானதாகவும், நிபந்தனையற்றதாகவும், குடும்ப அடிப்படையிலானதாகவும் வடிவமைக்கப்பட்டன என்றும், இத்தகைய உரிமையை, தலா ஒரு நபருக்கான பங்காக மாற்றி, குடும்ப அளவில் அதற்கு உச்சவரம்பு விதிப்பது, குறைந்த எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாநிலங்களை, குறிப்பாக, ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையும்.

அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, அவர்களின் அன்றாட மூன்று வேளை உணவிற்கும் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக விளங்குவதோடு, வெளிச்சந்தையில் இருந்து வேறு எந்தவொரு உணவுப் பொருளினாலும் அதனை ஈடு செய்ய முடியாது.

மேலும், தமிழ்நாட்டில் 5 உறுப்பினர்களுக்கும் குறைவான குடும்ப அளவைக் கொண்ட AAY குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 15.75 இலட்சமாகவும், 58.51 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட தமிழ்நாடு மட்டுமல்லாது, அத்தகைய பிற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படையும்.

ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டால், மிகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த சுமார் எழுபது இலட்சம் குடிமக்களின் உணவு பாதுகாப்பு சீர்குலையக் கூடுமென்பதால், 2013-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (1)-ன் முதலாவது வரம்பு நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் கோரியுள்ளார்.

Summary

Chief Minister Vijay urges to pm Narendra modi reconsideration of the Food Safety Act amendment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.