FOLLOW US

ON GOOGLE DISCOVER

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

‘பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு

பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

தங்கம் தென்னரசு - பெயர் மாற்றப்பட்ட மகளிர் பயண பேருந்து.

Updated On :9 ஜூலை 2026, 6:00 pm IST

மகளிர் விடியல் பயணப் பேருந்துத் திட்டத்தில் பெயர் மாற்றப்பட்ட விவகாரத்தில், ‘பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது! மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே.

ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும். பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர் முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின் தனது முதல் கையெழுத்து போட்டு பெண்கள் கட்டணமில்லாமல் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் 'மகளிர் விடியல் பயணத் திட்டத்தை’ தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தற்போது கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.

இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் இந்தத் திட்டம் உள்பட முந்தைய திமுக, அதிமுக அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளில், அவர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக 'மகளிர் விடியல் பயணம்' என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 'மகளிர் விடியல் பயணம்' என்ற இதன் பெயர் 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எதிர்க்கட்சியான திமுக தரப்பில் எழுந்த நிலையில், ஆளுங்கட்சித் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

Summary

'Magalir Vidiyal Payanam' is just 'Magalir Payanam' now: TN govt drops 'Vidiyal' word from free bus scheme

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.