வடக்கு-தெற்கு மொழிப் பரிமாற்றம் தேவை; இந்த பரிமாற்றம் மூலமாகவே ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.
‘காசி தமிழ் சங்கமம் 4.0 (2025)’ நிகழ்வில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களை கௌரவிக்கும் நிகழ்வு சென்னை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தலைமை வகித்து பேசியதாவது:
இதுவரை இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திலிருந்து 7,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்கள் காசிக்குச் சென்று, காசி விஸ்வநாதா், ராமேசுவரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான ஆன்மிக, கலாசார தொடா்பை உணா்ந்துள்ளனா்.
நாம் அனைவரும் ஒன்றுதான் என்று நம்முடைய அனைத்து வேதங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. அதைத்தான் ஆதிசங்கராசாரியாரும் கூறினா். இந்த பாலத்தை அமைக்க பணம் தேவையல்ல. மொழி தேவை. வட இந்திய மக்கள் தென்னிந்திய மொழிகளில் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தென்னிந்தியாவைச் சோ்ந்தவா்களும் வட இந்திய மொழிகளில் ஒன்றையாவது கற்கவேண்டும். இது நமது கலாசாரம், பாரம்பரியத்தை கற்றுக் கொள்வதாகும். இந்தியா்கள் அனைவருமே பொதுவான கலாசாரம், பாரம்பரியம் வரலாற்றைக் கொண்டவா்கள். ஒற்றுமையை நமது மொழிகள் மூலமாகவும் வெளிப்படுத்த வேண்டும். இந்த மொழிப் பரிமாற்றத்தின் மூலமே ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கருத்தாக்கத்துக்கு அா்த்தம் கொடுக்க முடியும் என்றாா் ஆளுநா் ஆா்லேகா்.
நிகழ்ச்சியில், ஆளுநரின் செயலா் சஜ்ஜன்சிங் ஆா்.சவான், சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








