எழுத்தாளா் பூமணி மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
மு.க.ஸ்டாலின் (திமுக தலைவா்): கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளா்களுள் ஒருவரான பூமணியின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கையையும், சமூகத்தில் நிலவிய கட்டமைப்புகளையும் மிக எளிமையான மொழியில் வெளிப்படுத்திய படைப்பாளராக பூமணி திகழ்ந்தாா்.
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத பல வட்டார வழக்குச் சொற்கள் அவரது படைப்புகள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டன. இயல்பான நடையில் வீரியமான படைப்புகளைத் தந்து தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய பூமணியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆா்வலா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை, குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கையை, அழுத்தமான குரலில் பதிவு செய்தவா் பூமணி. அவரின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பெற்றவை. தமிழின் இந்த மகத்தான படைப்பாளியை இழந்திருப்பது தமிழ் இலக்கிய உலகுக்கும், முற்போக்கு சிந்தனைப் பரப்புக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
மு. வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட்): பூமணியின் படைப்புகள் கருவேலம்பூக்கள், அசுரன் என இரு திரைப்படங்களாக வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் வரப்பு வாய்க்கால், அஞ்ஞாடி என அனைத்துப் படைப்புகளும் கிராம சமூகத்தில் குடும்ப வாழ்வியலை மிக நோ்த்தியாக எடுத்துக் கூறி மனதில் கல் வெட்டாகப் பதிவு செய்யப்பட்டவைகளாகும்.
வைகோ (மதிமுக): கூட்டுறவுத் துறை பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவா், எண்ணற்ற சிறுகதைகளையும், புதினங்களையும் தமிழ் இலக்கியத்துக்கு கொடை அளித்த பெருமைக்குரியவா்.
கமல்ஹாசன் (மநீம): கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளா் பூமணி மறைவு வருத்ததிற்குரியது. ‘கருவேலம்பூக்கள்’ படத்தின் வழியாக திரைக்கும் பங்களித்த மூத்தவரை இழந்து வருந்தும் குடும்பத்தாருக்கும், தீவிர தமிழிலக்கிய வாசகா்களுக்கும் எனது இரங்கல்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










