அலுவலக வேலையாக வெள்ளிக்கிழமை மதுரைக்கு ஒரு மின்னல்வேகப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. உடனடியாகச் சென்னைக்குத் திரும்பியாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம். அதனால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருக்கும் விஸ்வாஸ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. இத்தனைக்கும் அந்த நிகழ்வு மதுரை "தினமணி' அலுவலகத்தையொட்டி இருக்கும் லட்சுமி சுந்தரம் அரங்கத்தில்தான் நடைபெறுகிறது.
விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் என்கிற குடியிருப்பு நிர்மாண நிறுவனத்தின் வெள்ளி விழாதான் "விஸ்வாஸ் சங்கமம்' என்கிற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வெறும் மனை வணிகத்தில் ஈடுபடும் நிறுவனமாக இருந்திருந்தால், அதன் வெள்ளி விழா குறித்துப் பகிரவோ, சிலாகிக்கவோ ஒன்றுமில்லை. அதைக் கடந்து பல்வேறு சமூகப் பிரிவினரை இணைத்து, புதியதொரு சமுதாயப் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது என்பதுதான், அதன் வெள்ளி விழாவை வாழ்த்தி வரவேற்கத் தூண்டுகிறது.
நவீன மதுரையைக் கட்டமைத் திருப்பதில் வீட்டு வசதித் துறை, மாநகராட்சி, மாநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவற்றுக்கு சற்றும் குறையாத பங்களிப்பை வழங்கி இருக்கிறது விஸ்வாஸ் நிறுவனம். முந்தைய மீனாட்சி நூற்பாலை இப்போது விஸ்வாஸ் புரோமோட்டர்ஸால் ஒரு குடியிருப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கிருந்து தொடங்கிய அந்த நிறுவனத்தின் பயணம், இப்போது மதுரையில் தலைசிறந்த குடியிருப்பு உருவாக்க நிறுவனமாக அதை உயர்த்தி இருக்கிறது.
விஸ்வாஸ் நிறுவனத்தின் அதிபர், மதுரைக் கல்லூரி நிர்வாகத்தின் தலைவர், மதுரை கம்பன் கழகத்தின் செயலாளர் என்று கடிகாரத்தின் முள்ளைப்போல இரவு-பகல் பாராமல் சுற்றிச் சுழலும் நண்பர் சங்கர சீதாராமனின் தனித்துவம், அவரது இலக்கிய, ஆன்மிகப் பரிமாணம். மதுரையில் மட்டுமல்ல, தென் தமிழகத்தில் நடைபெறும் எந்தவொரு இலக்கிய நிகழ்ச்சியானாலும் அநேகமாக அதன் புரவலர் நண்பர் சங்கர சீதாராமனாகத்தான் இருப்பார்.
இலக்கியப் புரவலர்கள் பெரும் தனவந்தர்களாக இருப்பார்கள்; தொழிலதிபர்களாக இருப்பார்கள்; இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமையும், ஆன்மிகத்தில் தன்னைத் தோய்த்துக்கொண்ட செழுமையும் அமைந்திருப்பது அரிதிலும் அரிது. அப்படி ஒருவர் இருந்தார். அவர் "அருட்செல்வர்' பொள்ளாச்சி நா. மகாலிங்கம்.
இப்போது ஒருவர் இருக்கிறார். அவர் "விஸ்வாஸ்' அதிபர் சங்கர சீதாராமன்.
சங்கத் தமிழ் இலக்கியமானாலும், வள்ளுவரின் குறள் இடம்பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு அற நூல்களாக இருந்தாலும், சிலம்பு, கம்பகாதை உள்ளிட்ட காப்பியங்களாக இருந்தாலும், பிரபந்தங்கள், திருமுறைகள் அடங்கிய சமய இலக்கியமாக இருந்தாலும், மகாகவி பாரதியாரில் இருந்து புதுநடை போடும் நவீன இலக்கியமானாலும் இவற்றில் எது குறித்து வேண்டுமானாலும் புதுவெளிச்சம் பாய்ச்சும் சிறப்புரை வழங்கும் தேர்ச்சி பெற்ற நல்ல தமிழ் அறிஞராகவும் இருப்பவர் நண்பர் சங்கர சீதாராமன் என்பதுதான் அவரது தனித்த அடையாளம்.
இன்று அரசும், பல்கலைக்கழகங்களும் தமிழையும், தமிழிலக்கியத்தையும் மேம்படுத்துவதில் உதட்டளவு அக்கறைதான் காட்டுகின்றன என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. சட்ட விதிமுறைகளின்படி நிர்வாகம் பார்க்கத் தெரிந்த அதிகாரிகளுக்கு, நல்ல தமிழ் இலக்கியம் குறித்துத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதால், அரசின் மெத்தனம் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
புரவலர்கள் இல்லாமல் இலக்கிய அமைப்புகள் இல்லை; இலக்கிய அமைப்புகள் இல்லாமல் தமிழ் மொழியும், மொழி சார்ந்த இலக்கியங்களும் இல்லை; அதனால் வெள்ளி விழா காணும் விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் வெற்றி மேல் வெற்றியைக் குவிக்க வேண்டும். அப்போதுதான் நண்பர் சங்கர சீதாராமன் இலக்கியவாதிகளுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் வாரி வாரி வழங்கும் புரவலராகத் தொடர முடியும். அதனால், தமிழ் ஆர்வலர்கள் அனைவரின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமிழில் பயண இலக்கியம் என்பது அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே.செட்டியாரில் தொடங்குகிறது. 1850-1925 இடைவெளியில் பல்வேறு நாடுகள், ஊர்கள் குறித்துப் பலர் எழுதிய 140 கட்டுரைகளைத் தொகுத்து முதன் முறையாக அவர் "பயணக் கட்டுரைகள்' என்று ஆறு தொகுதிகளாக வெளியிட்டார். அவரே உலகம் முழுவதும் சுற்றிவந்து 1940-இல் "உலகம் சுற்றும் தமிழன்' என்று தனது கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து பலரும் தங்களது பயண அனுபவங்களையும், பல்வேறு நாடுகளில் பார்த்த, கேட்ட செய்திகளையும் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இணையும் வித்தியாசமான பயணக் கட்டுரைத் தொகுப்பு குரு அரவிந்தன் எழுதியிருக்கும் "அனுபவம் புதுமை'. ஏனைய பயண இலக்கியக் கட்டுரைகளைப்போல அல்லாமல், பல்வேறு நாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க அடையாளங்களை, அதிசயங்களை முன்னிலைப்படுத்தித் தொகுக்கப்பட்டிருக்கிறது "அனுபவம் புதுமை'.
குரு அரவிந்தன் இணையதள வாசகர்களுக்கு அறிமுகமான பிரபல எழுத்தாளர். கனடியச் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடி. சிறுகதை, புனைவு, கவிதை என்று இவரது படைப்புத் தளம் பரந்து விரிந்தது. ஈழத்து எழுத்தாளரான இவர் ஆனந்தவிகடன் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். "இனிய நந்தவனம்' இதழில் அவ்வப்போது இவர் எழுதும் சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன்.
இணையத்தின் மூலம் இவருடைய எழுத்துகளால் இணைந்த வாசகர்கள் ஏராளம். இது
வரையில் சுமார் 8 நாவல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள், 5 சிறுவர் இலக்கியப் பயிற்சி நூல்கள் மட்டுமல்லாமல் மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரிவிக்கிறது புத்தகத்தில் உள்ள இவரது தன்னுரைக் குறிப்பு.
கனடாவின் தலைநகர் டொரான்டோவில் வசிக்கும் குரு அரவிந்தன் உலகளாவிய அளவில் தான் சுற்றி வந்த நாடுகளில் பார்த்து வியந்த 20 அனுபவங்களைத் தொகுத்து "அனுபவம் புதுமை' என்று படைத்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் வெறும் சுற்றுலாக் கட்டுரைகளாக அல்லாமல், பல்வேறு தரவுகள், புதுப்புதுத் தகவல்களுடன், அந்தந்த நாடுகளின் வரலாற்றுப் பின்னணிகளையும் இணைத்து வழங்கி இருப்பதுதான் இதை வித்தியாசமான பயணப் பதிவாக்கி இருக்கிறது.
விழுப்புரம் அன்பாதவனின் இந்தப் படைப்பு அண்மையில் ஏற்பட்டிருக்கும் அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்துக்குப் பொருந்தாது. யுத்தம் ஓய்ந்து விட்டது என்று நம்ப இடமில்லை. அதிபர் டிரம்ப்பின் அடுத்த நிமிட முடிவு என்ன என்பது அவருக்கே தெரியுமா என்று தெரியாது.
முடிந்து ஓய்ந்தது யுத்தம்
மீதமிருப்பது அநாதைக் குழந்தைகள்
பதுங்குக் குழிகளில் சடலங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









