திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

இந்த வாரம் கலாரசிகன் - 21-06-2026

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் இந்த ஆண்டுக்கான 'கபிலவாணர்' விருது பேராசிரியர் அரங்க. இராமலிங்கத்துக்கு வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்.

News image
Updated On :21 ஜூன் 2026, 5:09 pm IST

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் இந்த ஆண்டுக்கான 'கபிலவாணர்' விருது பேராசிரியர் அரங்க. இராமலிங்கத்துக்கு வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1984-இல் விரிவுரையாளராகச் சேர்ந்து, முப்பது ஆண்டுகாலம் செவ்வனே பணியாற்றி, 2014-இல் பணி ஓய்வு பெற்றவர் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம். அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படைத்தவர்; பல்கலைக்கழகத்தின் சார்பில் 150-ஆவது ஆண்டு விழாவை ஒட்டி 150 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர்.

'தமிழர் நாகரிகமும் தமிழ் மொழி வரலாறும்' எனும் தலைப்பில் 16 அறிஞர்களின் 21 நூல்களைப் பத்துத் தொகுதிகளாகத் தொகுத்தளித்தவர்; 125 அறிஞர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகளைத் தொகுத்துத் 'திருக்குறள் களஞ்சியம்' வெளியிட்டவர்; 'தெய்வப் புலவரின் திருவாய்மொழி' என்கிற பெயரில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதி இருப்பவர்.

இத்துடன் முடிந்து விடுவதில்லை பேராசிரியர் அரங்க. இராமலிங்கத்தின் தமிழ்ப் பணி. வைணவ இலக்கியத்தில் தன்னைத் தோய்த்துக் கொண்டவர் என்றால், சைவ சமயத்தின் சாரம் பிழிந்து ஆன்மிக உரை நிகழ்த்துவதில் தன்னி

கரற்ற சொற்பொழிவாளர். தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருமந்திரம் குறித்து 108 வாரங்கள் தொடர் சொற்பொழிவுகளைத் திருக்கோயில்களில் பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் நிகழ்த்திய சாதனையாளர்.

தியாகதுருகத்தில் பிறந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுநிலைப் பட்டம் பெற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகச் சேர்ந்து, தமிழ்மொழித் துறையின் தலைவராகப் பணி ஓய்வு பெற்றவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தனது உயர்நிலை ஆய்வை ஐயா ச.வே.சுப்பிரமணியத்தின் மேற்பார்வையில் செய்தவர்.

'தினமணி' நாளிதழின் நடுப்பக்கமும், ஞாயிறு தோறும் வெளிவரும் 'தமிழ்மணி' பகுதியும் பேராசிரியர் அரங்க. இராமலிங்கத்தின் அறிவுசார் கட்டுரைகளால் பொலிவு பெறுபவை. தெ.பொ.மீ., அ.ச.ஞா. அடிச்சுவட்டில் இன்று சமய இலக்கியத்தில் தனி ஆளுமையாகத் திகழ்பவர் பேராசிரியர். அவர் எனது நண்பர் என்பதும், என் மீது அளவு கடந்த அன்பு பாராட்டுபவர் என்பதும் நான் பெற்ற பேறு.

பேராசிரியர் அரங்க. இராமலிங்கத்துக்குக் 'கபிலவாணர்' விருது வழங்குவதில் எனக்கு அப்படி என்ன வருத்தம் என்றுதானே கேட்கிறீர்கள்?

எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டிய விருது, இத்தனை கால தாமதமாக வழங்கப்படுகிறதே என்பதுதான் அந்த வருத்தம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டது மிகுந்த மனநிறைவைத் தந்தது.

99-ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் குறித்துப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்படிப் பேசும்போது பேராசிரியர் முனைவர் விஜயலட்சுமி, முனைவர் சுப்பையா பாண்டியன் நிகழ்த்திய அறிவியல் அரங்க செயல்முறை சொற்பொழிவு குறித்து வியந்து பாராட்டினார்.

நான் படித்த ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் (எனக்குப் பின்னால்) மாணவர் முனைவர் அ. சுப்பையா பாண்டியன். சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகவும், புதுக்கோட்டை அரசு கல்லூரியில் முதல்வராகவும், தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

அறிவியல் கருத்துகளை மனப்பாடம் செய்யாமல் சோதனை செய்து பார்த்துப் புரிந்துகொள்ள வழிகோலுவது என்பதுதான் முனைவர் சுப்பையா பாண்டியன் முன்னெடுத்திருக்கும் பணி. பொதுமக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். திருக்குறளின் அறிவியல் அடிப்படைகளைத் தமது அமர்வில் விளக்கியதாகச் சொன்னார்கள்.

அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது நிகழ்ச்சியைப் பார்க்கும், கேட்கும் வாய்ப்பு அமைந்தால் பெருமகிழ்ச்சி!

உரையாசிரியர்களும், பதிப்பாசிரியர்களும் இல்லாவிட்டால் நமக்குப் பண்டைத் தமிழ் இலக்கியச் செய்திகள் கிடைத்திருக்காது. அப்படியே கிடைத்திருந்தாலும் புரிந்திருக்காது. இலக்கண, இலக்கியங்கள் குறித்த புரிதலுக்குப் பதிப்பாசிரியர்கள்தான் காரணம்.

19-ஆம் நூற்றாண்டில் திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட ஒழுக்க நெறிகளை வலியுறுத்தும் நூல்கள் சுவடிகளிலிருந்து அச்சு வாகனம் ஏறின. சுவடி எழுதுவதில் ஒன்றுபோல அமைவதோ, பிழை திருத்துவதோ இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காகிதம் கண்டுபிடிக்கப்பட்டதும், அச்சு இயந்திரம் அறிமுகமானதும் இலக்கண, இலக்கியங்களும், புராண இதிகாசங்களும் அழிந்துவிடாமல் மனித இனத்துக்குக் காப்பாற்றப்பட்டன.

'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமி

நாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை,

ஆறுமுக நாவலர், கா. நமச்சிவாய

முதலியார் என்று தொடங்கி நமது பண்டைத் தமிழ் இலக்கியங்களை, சுவடிகளைத் தேடிப் பிடித்து, இரவு பகல் தூக்கம் விழித்து, பிழை திருத்தி அவர்கள் பதிப்பித்த வரலாறுகள், அவர்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கச் செய்கின்றன. மயிலை சீனி. வேங்கடசாமி, 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்று ஒரு நூலை யாத்திருக்கிறார். அது நாம் இழந்தவை என்னென்ன என்று எடுத்தியம்பி வருத்தப்பட வைக்கிறது.

வெளியான நூல்களுக்குப் பதிப்பு வரலாறு எழுதுவது என்பது இயல்பானது. ஆனால், முனைவர் ஆ. மணி வெளிவராத பதிப்புகளின் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சியில் றங்கியதுதான் ஆச்சரியப்படுத்துகிறது. 'வெளிவராத பதிப்புக்களின் வரலாறு' என்கிற அவரது நூல், இதுவரை யாரும் முன்னெடுக்காத புது முயற்சி. பதிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்பு பல்வேறு காரணங்களால் வெளிவராமல்போன நூல்களின் பதிப்பு வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் முனைவர் ஆ. மணி.

சங்க இலக்கிய ஆய்வுகளில் புலமைமிக்க முனைவர் ஆ. மணி; பதிப்பியல் நெறிகளை ஆராய்வதில் முதன்மையான அறிஞர்; இது அவரது 72-ஆவது ஆய்வுப் படைப்பு!

விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் என் குமாரின் கவிதைத் தொகுப்பான 'களிறு நடை'. அதிலிருந்து எடுக்கப்பட்டது இந்த ஹைக்கூ...

தனியே நடக்க விருப்பம் நிழல் படுத்துகிறதே...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.