தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தது முதல் என்னில் எழுந்த கவலை தவெக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட இருப்பவர் யாராக இருக்கும் என்பதாகத்தான் இருந்தது. அந்த ஐயப்பாட்டுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ராஜ்மோகன் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சராகவும், செய்தி- மக்கள் தொடர்புத் துறை அமைச்சராகவும் மட்டுமல்லாமல், தமிழ் வளர்ச்சித் துறையின் பொறுப்பும் வழங்கப்பட்ட அமைச்சரானார் எனும்போது, நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.
எளிமையான அடித்தட்டுப் பின்னணியில் இருந்து ஒருவர் சமூகத்தில் அடையாளம் காணப்படும் ஒருவராக தன்னை வளர்த்துக் கொள்ள முடிகிறது எனும்போதே, அவரது ஆளுமைத் திறன் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். சமூக ஊடகம், திரை உலகம் இரண்டையும் மட்டுமல்லாமல் இலக்கிய மேடைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் வலம் வந்தார் ராஜ்மோகன். நமது தினமணி' நாளிதழின் நிகழ்ச்சிகளின் வெற்றியில் அவரது பங்களிப்பும் இருந்திருக்கிறது எனும்போது, தமிழ் ஆர்வலர் ஒருவர் தமிழ் வளர்ச்சித் துறையை வழிநடத்தப் போகிறார் என்கிற நம்பிக்கையும் ஏற்படுகிறது.
கட்சி அனுதாபிகளும், கொள்கை உடன்பாடு உள்ளவர்களும் மட்டுமே தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெறுவார்கள் என்கிற நிலைமை மாறி, அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் அரசியல் சார்பில்லாத மொழி அறிஞர்களும் அடையாளம் காணப்பட்டு மரியாதை பெறவேண்டும் என்பதுதான் அவருக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்.
கடந்த இரண்டாண்டுகளாக, எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த நாளன்று தவெக தொண்டர்கள் பலர் தங்களது கட்சிக் கொடியுடன் இணைவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னர் எட்டயபுரம் மகாகவி
பாரதியார் இல்லத்தின் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து அதன் திறப்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொள்வதுடன், பாரதி அன்பர்களுடன் எட்டயபுரம் மணிமண்டபத்தை நோக்கிய ஊர்வலத்திலும் பங்கு பெற வேண்டும் என்பதும் எனது அன்புக் கட்டளை.
ஆசிரியர்-மாணவர் உறவு குறித்து இதிகாச புராணங்களும், இலக்கியப் பதிவுகளும் சிலாகிக்கின்றன. குரு-சிஷ்யன்' என்கிற அணுகுமுறை கீழை நாடுகளுக்கு மட்டுமே உள்ள தனித்துவம். பண்டைய கிரேக்கத்தில் சாக்ரடீஸ்-பிளேட்டோ-அரிஸ்டாட்டில் என்று குரு பரம்பரை இருந்தது என்றாலும்கூட, தெற்காசியாவிலும், கிழக்காசியாவிலும் இருந்த அளவுக்கு அந்த உறவு முறை தொடரவில்லை.
தமிழகத்தில் தொன்றுதொட்டு ஆசிரியர்-மாணாக்கர்கள் உறவு புனிதத்தன்மை கொண்டதாக இருந்து வருகிறது. தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் தனது என் சரித்திரத்தில் ஓர் இடத்தில்கூட தனது குருநாதர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. அவர் குறித்து கூறும்போதெல்லாம் ஆசிரியர்பிரான்' என்றுதான் குறிப்பிடுகிறார்.
கடந்த நூற்றாண்டு போல ஆசிரியர் மீது மரியாதையும், பக்தியும் இப்போது வணிகமயமாக்கப்பட்ட கல்வி முறையில் இல்லாமல் இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்யாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சூழலிலும், முன்மாதிரியாகப் பல ஆசிரியர்களும், மாணவர்களும் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவர் கோவை மாவட்டம் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் கா. திருநாவுக்கரசு.
சைவ, சமய மரபில் திருக்கயிலாயப் பரம்பரை வழியில் ஆதீனங்கள் சமய, சமுதாயப் பணிகளை ஆற்றி வருகின்றன. அவற்றுள் பேரூர் ஆதீனம் மிக முக்கியமான ஆதீனங்களில் ஒன்று. பேரூராதீனத்தின் 24-ஆவது சந்நிதானமான தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாருக்கு, குறிப்பிடத்தக்க தமிழ்ப் பாரம்பரியமும் உண்டு. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை-உ.வே.சாமிநாதையர்-அடிகளாசிரியர் மரபில் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அடிகளார்.
தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் மாணாக்கராகவும், குருபரம்பரை சீடராகவும் இருக்கும் பேரூராதீன 25-ஆம் சந்நிதானமான தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் தமிழ்க் கல்வி கற்று, பேரூராதீனத் தமிழ்க் கல்லூரியை முதல்வராகப் பொறுப்பேற்று நடத்துபவர் முனைவர் கா. திருநாவுக்கரசு. அவர் உருவாக்கி இருக்கும் மாணாக்கர்கள் பலர் இப்போது பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்கள்.
முனைவர் கா.திருநாவுக்கரசிடம் தமிழ் கற்றுத் தேர்ந்து, பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து தமிழ்ப் பணி மேற்கொள்ளும் அவரது 15 மாணவர்கள், அவருக்குப் புகழ்மாலை தொடுக்க முடிவெடுத்தனர். அதன் விளைவுதான் எங்கள் அண்ணா' என்கிற எழுத்துக் காணிக்கை. அவரது அகவை ஐம்பதையொட்டி அந்தத் தொகுப்பு வெளிக்கொணரப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
மாணவர்கள் ஆசிரியர்களுடனான தங்களது அனுபவங்களையும், அவர்களிடமிருந்து கற்றுத் தேர்ந்த செய்திகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றையும் தொகுத்து வழங்குவதுபோல அல்ல இது. தங்களது ஆசிரியர் குறித்து, அவரால் செதுக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது அறிவுத் தேடலில் சேகரித்துக் கொண்ட அனுபவச் செறிவை பகிர்ந்து கொள்ளும் அதிசயப்புதையல் எங்கள் அண்ணா'.
முனைவர் கா. திருநாவுக்கரசை அறிவின் வழிகாட்டி', என் நாவுக்கு அரசு', தாயுமானவர்', தமிழ்ச்சுடர்' என்றெல்லாம் அவர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவதைப் பார்க்கும்போதும், அவருடனான அனுபவங்களைப் படிக்கும்போதும் என்ன தோன்றுகிறது தெரியுமா? தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் பேரூரில் பேராசிரியராக இருந்துகூட, சாதனை படைக்க முடியும் என்று நிரூபிக்கிறார் முனைவர் கா. திருநாவுக்கரசு.
நண்பர் கல்கி ப்ரியன் கட்செவி அஞ்சலில் அவர் படித்து ரசித்த வேலியே பயிரை...' என்கிற ஒரு கவிதையை அனுப்பித் தந்திருந்தார். கவிசித்தன் ஏ.எஸ்.எம். முனியாண்டி எழுதியிருக்கும் இந்தக் கவிதையை தயவு செய்து நடந்து முடிந்த தேர்தலுடன் தொடர்பு படுத்திக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
காற்றை இழந்து
கவலைப்படும் கால்பந்துக்கு
எப்படிப் புரியவைப்பது?
காற்றை நிரப்பியவனே
காலால் உதைப்பான்
என்கிற உண்மையை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

இந்த வாரம் கலாரசிகன் - 10-05-2026

இந்த வாரம் கலாரசிகன் - 26-04-2026
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



