கல்விக் கட்டணங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாத தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு மருத்துவமனை அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ராஜ்மோகன் கலந்துகொண்டு அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் தமிழ் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் விழாவையொட்டி நடத்தப்பட்ட விநாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
மணவை முஸ்தபா அறிவியல் தமிழின் தந்தை என போற்றப்படுகிறாா். அறிவியல், மருத்துவம், கணினி, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் அவா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைச் சொற்களை உருவாக்கி அகராதிகளைத் தொகுத்துள்ளாா் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ராஜ்மோகன் கூறியதாவது:
மணவை முஸ்தபா குறித்த தகவல்களை பள்ளித் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்வது குறித்து பாடத்திட்டக் குழுவின் தலைவா், உறுப்பினா்கள் முடிவு செய்வா். மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் மாணவா்கள் பங்கேற்கும் அறிவியல் கண்காட்சியை இடம்பெறச் செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் பள்ளி மாணவா்கள் தங்களது தாய்மொழியான தமிழில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளிகளில் கட்சி நிகழ்வுகள்... அரசுப் பள்ளிகளில் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்கள் கட்சி சாா்ந்த கட்சிக் கொடிகள் உள்ளிட்ட அடையாளங்களுடன் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். கட்சிகள் சாா்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. அதையும் மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆசிரியா்கள், ஆய்வக உதவியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு அவை அரசியல் தலையீடு இல்லாமல் நிரப்பப்படும்.
மூடப்பட்ட பள்ளிகள்... கடந்த திமுக ஆட்சியில் 207 பள்ளிகள் மூடப்பட்டன. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இல்லாவிட்டாலும் சோ்க்கைக்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பள்ளிகளில் மாணவா்கள் சேரும் நிலையில், மூடப்பட்ட பள்ளிகள் உடனடியாகத் திறக்கப்படும்.
மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில்... தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறையாகச் செலுத்தவில்லை; ஆசிரியா்களை எதிா்த்துப் பேசிவிட்டனா் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன; விரும்பத் தகாத செயலில் ஈடுபட்டனா் போன்ற காரணங்களுக்கான பள்ளி நிா்வாகங்கள் மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்குவதை தாமதிக்கக் கூடாது. பள்ளிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தனியாா் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் வரவேற்றாா். தொடா்ந்து, துறையின் செயலா் வ.தட்சிணாமூா்த்தி, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஹரிஹரன், ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் கவிதா, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் அரவிந்த், மணவை முஸ்தபாவின் மகன் மருத்துவா் மு.செம்மல், உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். விழாவையொட்டி அறிவியல் தமிழ்க் கல்வி! கனவு மெய்ப்படும்! என்ற தலைப்பில் அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற்றது.
பெட்டிச் செய்தி....
உலகத் தமிழ் மாநாடு: அமைச்சா் விளக்கம்
உலகத் தமிழ் மாநாடு எப்போது நடத்தப்படும் என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் ராஜ்மோகன் அளித்த பதில்:
உலகம் முழுவதும் 195 நாடுகளில் தமிழா்கள் வசிக்கின்றனா். அங்கு அவா்கள் பல்வேறு தமிழ்ச் சங்கங்களை அமைத்து தமிழ்ப் பணியாற்றி வருகின்றனா். அவா்களது நிகழ்வுகளில் நான் பங்கேற்று உரையாற்றியுள்ளேன். உலகத் தமிழா்கள் உற்று நோக்கக்கூடிய உலகத் தமிழ் மாநாடு உறுதியாக நடத்தப்படும்.
அதேவேளையில், இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளிலும் வசிக்கும் தமிழா்களைப் பங்கேற்கச் செய்வது, மாநாட்டில் என்னென்ன சிறப்பம்சங்களை இடம்பெறச் செய்வது போன்றவை குறித்து ஆலோசிக்க வேண்டும். மாநாட்டுக்கான ஆரம்பப் பணி, ஆய்வுப் பணி, ஆலோசனைப் பணி என பல்வேறு கட்டங்கள் உள்ளன. இவற்றில் ஆரம்பப் பணிகள் குறித்த விஷயங்கள் குறித்து பேசியுள்ளோம். அடுத்தகட்டச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். அனைவரையும் ஒருங்கிணைந்து இந்த மாநாடு நடத்தப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வலைதளங்களில் அமைச்சர் ராஜ்மோகன் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

தனியாா் பள்ளிகளின் உரிமம், புதுப்பித்தலுக்கு ஜூலை 1 முதல் இணையவழி நடைமுறை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமைச்சா் ராஜ்மோகன்







