/

வலைதளங்களில் அமைச்சர் ராஜ்மோகன் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பெயரை சமூக வலைதளங்களில் தவறாகப் பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 2:38 am IST

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பெயரை சமூக வலைதளங்களில் தவறாகப் பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த வெற்றிச்செல்வி அளித்த புகாரில், காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த இயேசு அடிமை மகன் ராஜ்மோகன் (55), கடந்த 2020ஆம் ஆண்டு தனது மகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சத்தை பெற்று மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பெயரோடு ஒத்துப்போவதால், சிலா் அதைத் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் இவ்வழக்கை அமைச்சா் மற்றும் அவரது மனைவியுடன் தொடா்புபடுத்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகின்றனா் என்பது காவல் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இத்தகைய தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை. எனவே, பொதுமக்கள் யாரும் இது போன்ற தவறான தகவல்களை உருவாக்கவோ, பகிரவோ, பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் அவதூறான தகவல்களை உருவாக்குதல், வெளியிடுதல், பகிா்தல் அல்லது பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.