பெங்களூரில் வசிக்கும் என் சகோதரி குடும்பத்தினரின் குலதெய்வம் வள்ளியூர் சுப்பிரமணிய ஸ்வாமி. குலதெய்வ வழிபாட்டுக்காக எனது சகோதரி, குடும்பத்தினருடன் வள்ளியூர் செல்வதாகவும், திருநெல்வேலியில் தங்கப் போவதாகவும் தெரிவித்த போது எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நூற்றாண்டு முதல் கூட்டம் ஞாயிறன்று எனும் போது, ஆவல் பேராவலானது; கிளம்பிவிட்டேன்.
நெல்லையில் ஆங்காங்கே உணவு விடுதிகளில் "சைவம்', "அசைவம்' என்று எழுதப்பட்டிருந்தது என்னில் நெருடலை ஏற்படுத்தியது. எத்தனை எத்தனையோ அறிவியல் சொற்களுக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வாயில் நுழையாத, சாமானியர்கள் எளிதில் கையாள முடியாத தமிழ் சொற்களை வலிந்து தேடி அறிவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அன்றாடம் கையாளப்படும் தவறான சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிக்காமல் இருக்கிறோமே என்கிற வருத்தம் எழுந்தது.
உணவில் எங்கிருந்து "சைவம்', "வைணவம்' வந்தது? "அசைவம்' என்பதற்கு வள்ளுவப் பெருந்தகையே "புலால்' என்கிற அருமையான வார்த்தையை நமக்குத் தந்திருக்கிறார். உணவு விடுதிகளில் "அசைவம்' என்பதற்குப் பதிலாக "புலால் உணவு' என்று அறிவித்தால் என்ன? புலால் உண்ணாதவர்களை, "தாவர உணவாளர்கள்' என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். தாவர உணவு (வெஜிடேரியன்), புலால் உணவு என்று நாம் பயன்படுத்தத் தொடங்கினால் "சைவம்' "அசைவம்' என்பது வழக்கொழிந்துவிடும்.
நெல்லையிலிருந்து தென்காசிக்கு ஆலங்குளம் வழியே பயணித்த போது ச.வே.சு. ஐயாவின் நினைவு என்னை ஆட்கொண்டது.
சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் தமிழ் அறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன். 1969-இல் விக்கிரமசிங்கபுரம் பாபநாசத்தில் திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியைத் தோற்றுவித்த பெருந்தகை.
பணி ஓய்வு பெற்று சொந்த ஊருக்குத் திரும்பிய முனைவர் ச.வே.சு., தமிழூர் என்று ஒரு சிற்றூரை ஆலங்குளத்துக்கு அருகில் உருவாக்கினார். அவர் தனக்கென்று அங்கே ஒரு வீடு கட்டிக் கொண்டது மட்டுமல்லாமல், அருகிலேயே தான் படித்து சேகரித்த பொக்கிஷங்களான அருந்தமிழ்ப் புத்தகங்களை நூலகமாக்கி வைத்திருந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆலங்குளம் வழியாக நெல்லையில் இருந்து தென்காசிக்குச் செல்வதாக இருந்தால் தமிழூரில் ச.வே.சு. ஐயாவைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடி அவரது ஆசி பெறாமல் போனதில்லை. எழுதிக் கொண்டிருக்கும் நூல் குறித்தும், செய்து கொண்டிருக்கும் ஆய்வு குறித்தும் என்னிடம் பகிர்ந்து கொள்ளும்போது நான் அவரது மாணவனாகவே மாறி விடுவேன்.
அகவை 90-ஐ நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும்கூட அவரைச் சுற்றி முனைவர் பட்ட ஆய்வாளர்கள் சிலர் இருந்தார்கள். 44 பேர் அவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
குழந்தைகளைப் பேணுவதுபோல அவர் தனது புத்தகங்களைப் பாதுகாத்து வந்ததை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன்.
2017-இல் மறைந்த ச.வே.சு. ஐயாவுக்கு தமிழூரில் இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நினைவு வளாகத்தில் ஒரு தியான மையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய 200-க்கும் மேற்பட்ட நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அவர் போற்றிப் பாதுகாத்த புத்தகங்களை அவரால் தொடங்கப்பட்ட பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரிக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டனர்.
அந்தப் புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும். குன்றக்குடி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரி என்பதால் நல்ல தமிழ் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படும் என்று நம்பலாம்.
தென்காசி மேலகரத்தில் திருவள்ளுவர் கழகச் செயலர் வழக்குரைஞர் கனகசபாபதியின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த "என் வாழ்க்கைச் சுவடுகள்' என்கிற தன் வரலாற்று நூலில் "சின்னஞ் சிறிய சிட்டு வானில் கருடனாகி வலம் வந்த வரலாறு இது' என்று பதிவு செய்கிறார் பேராசிரியர் ச. கணபதிராமன்.
முனைவர் ச.கணபதிராமனின் வாழ்க்கைப் பயணம் என்பது அய்யாபுரம் என்கிற சிறு கிராமத்தில் தொடங்கி, தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களில் ஒருவராக உயர்ந்த வரலாறு. "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளையின் கடைசி காலத்தில் அவரது அணுக்கத் தொண்டராக இருந்தவர் என்பதை விட வளர்ப்பு மகனாகவே இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
"கபிலவாணர்', "வாகீச கலாநிதி', "தமிழ்ச் செம்மல்' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற முனைவர் ச. கணபதிராமன் கடைசி வரை தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் தலைவராகவும் இருந்தவர்.
அவரது மிகப் பெரிய பங்களிப்பு "கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்' என்கிற படைப்பு. மகாகவி பாரதியார் கடையம் நாள்களில் எழுதிய கவிதைகள், அதன் பின்னணிகளைத் தேடிப் பிடித்து பதிவு செய்திருக்கிறார்.
எனது சேகரிப்புக்கு நல்லதொரு புத்தகத்தை வழங்கிய வழக்குரைஞர் கனகசபாபதிக்கு நன்றி.
முதியோர் இல்லத்தில் பெற்றோரைச் சேர்த்துவிட்டு, வெளிநாடுகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அவ்வப்போது வந்து பெற்றோரைச் சந்திப்பவர்கள்; அவர்களிடம் தொலைபேசியில் உரையாடி தங்கள் அக்கறையை வெளிப்படுத்துபவர்கள்; எப்போதாவது வந்து விசாரித்துவிட்டுப் போகிறவர்கள் என்று முதியோர் இல்லம் சந்திக்கும் பிள்ளைகளின் பட்டியல் நீளும்.
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள விரும்பாத இரும்பு நெஞ்சங்களும் இருக்கத்தானே செய்கின்றன.
சக்திமான் அசோகனின் "வெட்கப்படும் நெற்கதிர்' தொகுப்பில் இடம்பெறுகிறது இந்தக் கவிதை.
அம்மா இறந்தது தெரியாமல்
முதியோர் இல்லத்திற்கு
பணம் அனுப்புகிறான்
பையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா... ஒரு செல்லுலாய்ட் சகாப்தம்

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

இந்த வாரம் கலாரசிகன் - 24-05-2026

தேவை மனித நேயம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



