சற்றும் எதிர்பாராதது இயக்குநர் பாக்யராஜின் மறைவு. பாரதிராஜா மறைந்த அடுத்த மூன்று வாரங்களில் இவரும் விடைபெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில காலமாகவே சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார் என்றாலும்கூட, எந்தவொரு முக்கியமான நிகழ்ச்சியையும் அவர் தவிர்த்ததில்லை. கோவாவில் நடந்த இயக்குநர் சுந்தர்.சி. -நடிகை குஷ்பு தம்பதியினரின் மகள் திருமணம் உள்பட.
பாக்யராஜ் திரையுலகில் வெற்றி பவனி வரத்தொடங்கி, 'எங்கள் டைரக்டர்' என்று பெருமிதத்துடன் சொல்லத் தொடங்கிய பிறகுதான் இயக்குநர் பாரதிராஜா ஸ்கூல் (பட்டறை) என்கிற புதிய வார்ப்புகளின் சகாப்தம் தொடங்கியது. குருவும் சிஷ்யனும் என்ற அளவுக்கு அவர்கள் இணைந்திருந்தனர் என்பதை ஒருவர் பின் ஒருவராக அவர்கள் விடைபெற்றுக் கொண்டது தெரிவிக்கிறது.
'சாவி' வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தபோது நடந்த இயக்குநர் பாக்யராஜுடனான அந்த முதல் சந்திப்பு இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. இயக்குநர் பாக்யராஜ் எழுதி, ஈரோடு முருகேஷ் இயக்கிய திரைப்படம் 'சாட்டை இல்லாத பம்பரம்'. நடிகர் சிவகுமார், நடிகை சரிதா நடித்த அந்தத் திரைப்படத்தின் கதை 'சாவி' வார இதழில் தொடராக வெளிவந்தது. அப்போதுதான் முதன்முறையாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
திரைப்பட இயக்குநர், கதாசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என்கிற வட்டத்துக்குள் எல்லாம் அவரை அடைத்துவிட முடியாது. 'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகு திரைக்கதை உத்தியைத் வசப்படுத்திக் கொண்ட அவரைத் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, அமிதாப்பச்சன் தொடங்கி ஒட்டுமொத்த ஹிந்தி திரையுலகமே அண்ணாந்து பார்த்தது. ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ சரளமாகப் பேசத் தெரியாமலேயே அவர் தேசிய அளவில் வெற்றி பெற்றதை அசாத்திய சாதனை என்பதல்லாமல் வேறெப்படி வர்ணிப்பது?
இசையைக் கற்றுத் தேர்ந்து தனது திரைப்படங்களில் இசையமைக்கத் துணிந்த அவரது தன்னம்பிக்கையை வியந்து பாராட்டாதவர்களே கிடையாது. அதைவிடப் பெரிய சாதனையொன்றை அவர் நிகழ்த்தினார். 'பாக்யா' என்கிற பெயரில் வார இதழ் தொடங்கி, வெற்றிகரமான இதழியலாளராக அவர் உயர்ந்ததை நாம் மறந்துவிடலாகாது. ஜாம்பவான்கள் தொடங்கி நடத்திய 'சாவி' 'இதயம் பேசுகிறது' வார இதழ்கள் நின்றுவிட்ட பிறகும்கூட 'பாக்யா' இதழுக்கான வாசகர்கள் குறையவில்லை.
குட்டிக் கதைகளுடன் வெளிவந்த 'பாக்யா' இதழில் பாக்யராஜின் கேள்வி- பதில்களும், ஏனைய வார இதழ்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்த 'பாக்யா' அட்டைப் படங்களும் இதழியலாளர் பாக்யராஜின் தனித்த முத்திரைகள். அரசியலைத் தவிர அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகத்தான் இருந்தது.
திரைக்கலைஞர் பாக்யராஜுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தும் இந்த வேளையில், இதழியலாளர் பாக்யராஜை நினைவுகூர்ந்து பதிவு செய்ய விழைகிறேன். நடிகர், இயக்குநர் என்பதைத் தாண்டி அடிப்படையில் பாக்யராஜ் ஓர் எழுத்தாளர். அதை எப்படி மறக்க முடியும்?
கதை என்பது உண்மையான அல்லது கற்பனை சம்பவங்கள், கர்ண பரம்பரையாக சொல்லப்பட்ட நிகழ்வுகள், புராணம், விசித்திரமான செய்திகள் குறித்து உரைநடையாகவோ, கவிதையிலோ, வாய்மொழியாகவோ சொல்லப்படலாம்; அச்சில் பதிப்பிக்கப்படலாம் என்கிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. கதை சரி, சிறுகதை எப்படி இருக்க வேண்டும்? நறுக்குத் தெறித்தாற்போல கச்சிதமாக இருக்க வேண்டும்.
மனம்போன போக்கில் சுற்றி அலையாமல், எந்த ஒரு இடத்திலும் தயங்கித் தாமதிக்காமல், துணைப் பாத்திரங்களோ, இடை நிகழ்ச்சிகளோ அல்லாமல் ஒரு முகப்பட்டதாக முக்கியக் கருத்தை ஒட்டியே இருப்பது சிறுகதை. தன் அமைப்புக் கூட்டுக்குள்ளே பின்னிப்பிணைந்து சுருக்கமாக இருக்க வேண்டும். இது யார் தந்த விளக்கம், யார் வகுத்த இலக்கணம் என்று கேட்காதீர்கள். எனது பார்வை இது, அவ்வளவே...
அதிகபட்சம் 15 நிமிஷத்தில் படித்து முடித்துவிட வேண்டும். படித்தவரின் மனதில் பதிந்து மெல்லிய புன்னகை, 'அடடா', 'சபாஷ்', விழிகளின் ஓரத்தில் சிறு கண்ணீர்த்துளி, இதயத்தின் ஆழத்தில் இனம் புரியாத வலி என்று ஏற்படுத்த முடிந்தால் என்னைப் பொருத்தவரை அதுதான் நல்ல சிறுகதை. 'விமர்
சனம்' என்கிற முள்வேலி போட்டு, அவற்றால் பல தடைகள் விதித்து, உணர்ச்சியைவிட வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் 'அறிவுஜீவி' சிறுகதைகளை ரசிப்பதற்கான மேதாவித்தனம் எனக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இப்போது எதற்கு சிறுகதை குறித்த இந்த விவாதம் என்று சிலர் கேட்கக்கூடும். கடந்த வாரம் தில்லித் தமிழ்ச் சங்கத்தில், 'பத்ம' விருது பெற்ற தமிழ் ஆளுமைகள் சிலருக்குப் பாராட்டு விழா நடந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். சென்றிருந்தேன்.
தில்லி 'தினமணி' அலுவலகத்தில் உள்ள எனது அறையில், பயணத்தின்போது படிப்பதற்காக நான் எடுத்துச் சென்ற பல புத்தகங்கள் எனது வாசிப்புக்காகக் காத்து கிடந்தன. அவற்றில் 'கம்பதாசன் கதைகள்' தொகுப்பும் இருந்தது. கவிஞர் கம்பதாசனின் 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அது.
பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவிக்குப் பிறகு திரைப்படப் பாடல்கள் எழுதுவதில் ஒரு சில காலம் கொடிகட்டிப் பறந்தவர் கவிஞர் கம்பதாசன். அவர் வாழ்ந்த காலத்தில், மொழி மாற்றப் படங்களுக்கு அதே இசைக்கேற்ற வாய் அசைப்புக்கு இசைந்த வார்த்தைகளைச் சேர்த்துப் பாடல் புனையும் அற்புதத் திறமை அவருக்கு வாய்த்திருந்தது என்று சொல்வார்கள்.
'கவிக்கனல்' என்று அழைக்கப்பட்ட கவிஞர் கம்பதாசன் எழுதிய 'கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே'
'கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்' உள்ளிட்ட பாடல்கள் காலத்தால் அழியாதவை. இப்போதும்கூட நினைவு
கூரப்படுபவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு முன்பு, சமதர்மக் கருத்துகளை திரைப்படப் பாடல்களில் வெளிப்படுத்திய பெருமை அவரைத்தான் சாரும்.
'மறைந்த நட்சத்திரம்' தொடங்கி, 'முதல் முத்தம்' வரையில் 17 சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலானவை. தில்லியில் புறப்பட்ட விமானம் சென்னையில் தரையிறங்குவதற்குள் படித்து முடித்து விட்டேன். கவிஞர் கம்பதாசன் அந்தக் கதைகளில் உலவ விட்டிருக்கும் கதாபாத்திரங்கள் இப்போதும் எனது நினைவில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
கோத்தகிரி ரா. பிரேம் சுரேஷ்
எழுதிய ஹைக்கூ இது-
ஆசை துறந்த
புத்தனுக்குத்
தங்கத்தில் சிலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










