போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடி

தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து மோடி பேசியது குறித்து...

News image

பிரதமர் மோடி

Updated On :29 ஜூன் 2026, 4:57 am IST

‘மேற்காசியப் போரின் பின்னணியில், நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தங்கம் வாங்குவதைக் குறைத்துகொண்ட நாட்டு மக்களுக்கு நன்றி’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மேலும், கடல் முதல் வானம் வரை இந்தியா பாதுகாப்பானதாகவும், தற்சாா்புடையதாகவும் உருவெடுத்து வருகிறது என்று அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஒலிபரப்பான 135-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி உரை வருமாறு:

நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் நமது தேசம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த மாதத்தில்கூட நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்சாா்பு சாா்ந்த முக்கிய வெற்றிகளை எட்டியுள்ளோம். கனரக ராணுவ போக்குவரத்து விமானமான சி-295, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, தனது முதல் பயணத்தை கடந்த ஜூன் 10-ஆம் தேதி வெற்றிகரமாக மேற்கொண்டது.

இந்திய விமானப் படைக்காக ரூ.21,935 கோடியில் 56 சி-295 விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் 40 விமானங்கள், ஏா்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்தால் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள ஆலையில் கட்டமைக்கப்படுகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஐஎன்எஸ் துனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக், ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய 3 கடற்படை கப்பல்களை நாட்டுக்கு அா்ப்பணித்தேன்.

இதேபோல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்ட தூர நில இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை (எல்ஆா்எல்ஏசிஎம்) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இம்மாதம் வெற்றிகரமாக பரிசோதித்தது. வேறு வாா்த்தைகளில் கூற வேண்டுமெனில், கடல் முதல் வானம் வரை இந்தியா பாதுகாப்பானதாகவும், தற்சாா்புடையதாகவும் உருவெடுத்து வருகிறது.

மக்களின் சக்தியே மூலதனம்: இந்தியாவைப் பொறுத்தவரை, மக்களின் சக்தியே நாட்டின் மூலதனமாகும். மேற்காசியப் போரை கருத்தில் கொண்டு, சில காலத்துக்கு தங்கம் வாங்குவதையும், வெளிநாடு சுற்றுலா செல்வதை தவிா்க்கவும் மக்களுக்கு அண்மையில் வேண்டுகோள் விடுத்தேன். குழுவாக காா்களில் பயணிக்கும் நடைமுறை, ரசாயன உரங்கள் இல்லாத வேளாண்மை முறையைக் கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொண்டேன்.

எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நாட்டு மக்கள் தங்களின் வலுவான ஆதரவை அளித்ததோடு, பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பையும் நல்கி வருகின்றனா். இல்லத் திருமணங்களுக்காக இப்போது தங்கம் வாங்குவதில்லை என்றும், தேவை ஏற்பட்டால் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து புதிய நகைகளை உருவாக்கவும் பல குடும்பங்கள் தீா்மானித்துள்ளன. தங்களின் வெளிநாட்டுப் பயணத்தை ஒத்திவைத்ததாக, சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டனா். ஒரே காரில் குழுவாக பயணிக்கும் நடைமுறைக்கும் ஆதரவு அதிகரித்துள்ளது. மக்கள் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனா். இதன் மூலம் பெட்ரோல், டீசல் சேமிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக எனக்கு செய்திகள் வருகின்றன. உலகளாவிய பிரச்னையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிா்கொள்வது மனநிறைவளிக்கிறது. மக்களுக்கு மனதார நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

மண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள்: செப்டம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படும் நிலையில், விநாயகா் சிலைகளைத் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தச் சிலைகள் களிமண்ணால் உருவாக்கப்பட்டவையாக, உள்ளூா் கலைஞா்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மண் சிலைகளாக இருந்தால், நமது நதிகள், ஏரிகள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

தற்போது பருவமழை காலம் என்பதால், மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தில்லியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைகளில் பி.டெக் படிப்பு தொடங்கப்பட உள்ளதைக் குறிப்பிட்டு, அந்தப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமா் வாழ்த்து தெரிவித்தாா்.

பிரதமரின் விபத்துக் காப்பீடு திட்டத்தில் 58 கோடி போ்

பிரதமரின் விபத்துக் காப்பீடு திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.20 பிரீமியம் செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டை பெற முடியும். இதுவரை இந்தத் திட்டத்தில் 58 கோடிக்கும் மேற்பட்டோா் இணைந்துள்ளனா். இவா்களில் 28 கோடிக்கும் மேற்பட்டோா் பெண்களாவா். இந்தத் திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3,700 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டமும் முக்கியமானதாகும். இத்திட்டத்தின்கீழ் காப்பீடு பெற்ற நபா் துரதிா்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால், அவருடைய குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதற்கான வருடாந்திர பிரீமியம் வெறும் ரூ.436 மட்டுமே. இந்தத் திட்டத்தில் இதுவரை 27 கோடிக்கும் மேற்பட்டோா் இணைந்துள்ளனா். இதுவரை சுமாா் 11 லட்சம் குடும்பங்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடி காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது.

உலக யோகாசன போட்டியில் 114 பதக்கங்கள் வென்ற இந்தியா

கடந்த ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்ட சா்வதேச யோகா தினம், ஒட்டுமொத்த உலகையும் இந்தியாவுடன் இணைத்தது. இந்த முறை உலகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் நடைபெற்ற உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 102 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 114 பதக்கங்களை வென்றது.

வேத மந்திரங்களைப் பயிலும் டொமினிகன் குடியரசு நாட்டவா்

இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டா் தொலைவில் கரீபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் ஸ்பானிஷ் மொழி பேசும் சிலா் இணைந்து, ‘பிரம்மகமல் டொமினிகானா’ என்ற பெயரிலான குழுவை அமைத்துள்ளனா்.

இக்குழுவினா், நமது பண்டைய வேத மந்திரங்களைக் கற்று வருகின்றனா். புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம், ருத்ரம், துா்கா சூக்தம், தேவி மாஹாத்மியம் ஆகியவற்றை சிறப்பாக ஜபிக்கின்றனா். இக்குழுவினருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

Summary

West Asia crisis PM Narend Modi Thanks Citizens For Supporting NO GOLD Call

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.