FOLLOW US

ON GOOGLE DISCOVER

புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மாற்று இடம்: தமிழக அரசின் புதிய முன்மொழிவு வரவில்லை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்டத்துக்கு மாற்று இடத்தை வழங்கும் முன்மொழிவு எதுவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 5:44 am IST

நமது சிறப்பு நிருபர்

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்டத்துக்கு மாற்று இடத்தை வழங்கும் முன்மொழிவு எதுவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விகளுக்கு, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:

பரந்தூரில் சர்வதேச பசுமைவழி விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழக அரசு நிறுவனமான "டிட்கோ'வுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025-ஆம் ஆண்டு ஏப். 7-ஆம் தேதி கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது. டிட்கோ சமர்ப்பித்த திட்டத்தின்படி, முதல் கட்ட திட்ட தயாரிப்புக்கான உத்தேச திட்ட மதிப்பு ரூ. 10,500 கோடியாகும்.

2008-ஆம் ஆண்டின் பசுமைவழி விமான நிலைய கொள்கையின்படி, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு, நிதி திரட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட செயல்பாட்டுப் பொறுப்புகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனத்தையே சாரும். அத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு என்பது நிலம் கையகப்படுத்துதல், கட்டாய அனுமதி பெறுதல் மற்றும் நிதி ஆதாரங்களை உறுதி செய்தல் போன்ற பல காரணிகளைப் பொருத்தே அமையும் என்று அமைச்சர் முரளிதர் மோஹோல் கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மாற்றக் கோரி தமிழக அரசு ஏதேனும் புதிதாக முன்மொழிவு அல்லது கோரிக்கை விடுத்துள்ளதா என்ற கேள்விக்கு "இல்லை' என ஒற்றை வார்த்தையில் மத்திய அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்துக்கு எதிராக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் தவெக தலைவர் ஜோசப் விஜய். கடந்த மே மாதம் தவெக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தவெக தொடர்ந்து எதிர்க்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆளும் கட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில், விமான நிலைய திட்டத்துக்கு மாற்று இடத்தை முன்மொழிவது தொடர்பான எந்தவொரு தகவல் பரிமாற்றமும் தமிழகத்திடமிருந்து வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.