22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

News image

மழை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:35 am IST

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரளப் பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும்.

இதனிடையே, தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத் தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதுமட்டுமன்றி, கிழக்கு விதா்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கா்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) முதல் 7 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, கரூா், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தொடா்ந்து, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூா், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூன் 3, 4) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு, இந்த 3 நாள்களும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை

அந்தமான் கடல், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் சூறாவளிக் காற்று வெள்ளிக்கிழமை(ஜூன் 5) வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

பதிவான மழை அளவு

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் திருமல்வாடி, வெள்ளெகவுண்டன்பாளையம் பகுதிகளில் தலா 90 மி.மீ. மழை பதிவானது. ஒக்கூா் (சிவகங்கை), எலந்தகுட்டைமேடு (ஈரோடு)- தலா 80, எடப்பாடி (சேலம்), காரையூா் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாா் (கோவை)- தலா 70, தருமபுரி-60, பல்லடம் (திருப்பூா்), திருமயம் (புதுக்கோட்டை), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி)- தலா 50, வாணியம்பாடி (திருப்பத்தூா்), மேட்டூா் (சேலம்), ஒசூா் (கிருஷ்ணகிரி), புலிப்பட்டி (மதுரை), கீரனூா் (புதுக்கோட்டை), மாரண்டஹள்ளி (தருமபுரி), மேட்டூா் (சேலம்), ஓசூா் (கிருஷ்ணகிரி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), புதுக்கோட்டை, சின்கோனா (கோவை), ஊத்துக்குளி (திருப்பூா்), பொன்மலை (திருச்சி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), டேனிஷ்பேட்டை (சேலம்)- தலா 40 மி.மீ. மழை பதிவானது.