உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆப்பனூரில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து...

Published On :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் கண்டெடுப்பாக, மாவட்டத்தில் முதல் முறையாக சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகள் பொறிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தின் ஆண்டியேந்தல் பகுதியில் அமைந்துள்ள அரியநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் இந்த கல்வெட்டு மண்மூடிக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் குடமுழுக்கு திருப்பணியின்போது இந்தக் கல் வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், அது கல்வெட்டு என்பது தெரியாமல் மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோயிலுக்கு வந்த மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த ஆசிரியர் முனியசாமி, கல்வெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையச் செயலாளர் சாந்தலிங்கத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து சாந்தலிங்கம் மற்றும் உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து கல்வெட்டை வாசித்தனர்.

தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் வாசகம்: “ஆபன்னூர் ஏறிய் மாண்டு விழுந்த அத்தியன் கீரன்கல்” என்பதாகும்.

இதன் பொருள், ஆப்பனூரில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த கீரன் என்ற வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பதாகும். இதில் “அத்தியன்” என்பது வீரனின் தந்தை பெயராகவும், “கீரன்” என்பது வீரனின் பெயராகவும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

இந்தக் கல்வெட்டின் காலக்கணிப்பு மற்றும் உண்மைத்தன்மை குறித்து கல்வெட்டு நிபுணர்களான சுப்பராயலு, மார்க்சியகாந்தி மற்றும் ராஜகோபால் ஆகியோரின் கருத்துகளும் பெறப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக சாந்தலிங்கம் தெரிவித்தார்.

மேலும், “ஆப்பனூர்” என்ற ஊர்பெயர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததற்கான உறுதியான சான்றாக இந்த கல்வெட்டு விளங்குகிறது. பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற 14 சிவத்தலங்களில் ஒன்றாக இப்பகுதி குறிப்பிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சங்ககாலத் தமிழர்களின் எழுத்து மரபு, வீரர் வழிபாட்டு பண்பாடு மற்றும் சமூக வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டும் அரிய ஆதாரமாக இந்த தமிழி நடுகல் கல்வெட்டு அமைந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Summary

The first 2,000-year-old Tamil-Brahmi hero stone inscription has been discovered in Ramanathapuram district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.