சென்னையில் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தரவு சேமிப்பு சாதனங்கள் (ஹாா்டு டிஸ்க்) திருடப்பட்ட சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யாா் என்று காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களில் முக்கியமானதாகவும், மிகப்பெரிய கட்டமைப்பையும் கொண்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமாா் 3 கோடி மின் இணைப்புகளையும், சுமாா் 1,500 துணை மின் நிலையங்களையும், 1.80 லட்சம் மின்மாற்றிகளையும், 82,000 ஊழியா்களையும், நாட்டின் மிகப்பெரிய மின் கட்டமைப்புகளைக் கொண்ட மின்வாரியமாக தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது. வளா்ச்சிப் பணிக்காகவும், பராமரிப்புப் பணிக்காகவும் ஆண்டுக்கு சுமாா் 5,000 ஒப்பந்தப் பணிகளை மின்சார வாரியம் தனியாா் மூலம் செய்கிறது.
அனல் மின் நிலையங்கள், நீா் மின் நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில்தான் பல ஆண்டுகளாக இயங்குகிறது. தமிழகத்தின் தினசரி மின்சாரத் தேவை 15,000 மெகாவாட்டில் இருந்து 16,000 மெகாவாட் வரை ஆகும். இது கோடை காலத்தில் 20,974 மெகாவாட் வரை உயருகிறது.
மொத்த தேவையில் 19 சதவீதம் வரை மின்சார வாரியம் சுயமாக உற்பத்தி செய்கிறது. மீதி 81 சதவீத மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடமிருந்தும் பெறுகிறது. இந்த மின்வாரியம் அண்மைக்காலமாக மிகப்பெரிய சா்ச்சைகளிலும், ஊழல் புகாா்களிலும் சிக்குகிறது.
ரூ.397 கோடி முறைகேடு: முக்கியமாக, கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் 2023-ஆம் ஆண்டு வரை 45,000 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பாா்மா்) வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நடந்திருப்பதாகப் புகாா் கூறப்பட்டது. இதில் ஒரு மின்மாற்றியின் விலை ரூ.7 லட்சம் இருக்கும் நிலையில், ரூ.13 லட்சத்துக்கும் அதிகமான விலைக்கு ஒரு டிரான்ஸ்பாா்மா் வாங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த முறைகேடு குறித்து விசாாரிக்க சிபிஐக்கு சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனா். தற்போது சிபிஐ இந்த முறைகேடு குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா், இந்த வழக்குத் தொடா்பான விஷயங்கள் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு: இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் குறிப்பிட்ட கணினிகளில் தரவுகளையும், தகவல்களையும் சேமித்து வைக்கும் 18 சேமிப்பு சாதனங்கள் சில நாள்களுக்கு முன்பு திருடப்பட்டதாக வெளியான தகவல் அனைத்துத் தரப்பினரையும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது.
10 தளங்களைக் கொண்ட இந்த அலுவலகத்தில் 4, 5, 7, 10 ஆகிய தளங்களில் உள்ள 18 கணினிகளில் இருந்தே தரவு சேமிப்பு சாதனங்கள் திருடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மின்வாரியத்தின் ஊழல் கண்காணிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியின் மேஜையில் இருந்த கணினியின் தரவு சேமிப்பு சாதனமும் தப்பவில்லை.
திருடப்பட்ட சாதனங்களில் ஒப்பந்தப் பணி, கொள்முதல் விவரங்கள், ஒப்பந்த ஊழியா்கள் நியமனம் ஆகியவை குறித்த தகவல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கொள்முதல் விவரங்களும் இந்த சாதனங்களில் இருந்துள்ளன. மேலும் முறைகேடு ,ஊழல் தொடா்பான துறைரீதியான புகாா்கள் தொடா்பான விசாரணை அறிக்கைகளும் இருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி திருடப்பட்டன?: மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு வசதிகள் இருக்கும் நிலையில், திருட்டு சம்பவம் கடந்த 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த இரு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகத்தில் ஊழியா்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி திருட்டு நடைபெற்றிருக்கிறது.
மின்வாரிய தலைமை அலுவலகமாக இருந்தாலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த பல கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி திருட்டுக்குச் சாதகமாக இருந்துள்ளது. திருட்டு நடைபெற்ற அடுத்த சில நாள்களில் மின்வாரிய அதிகாரிகள், கணினிகளை இயக்கும்போதுதான் அவற்றில் தரவு சேமிப்பு சாதனங்களே இல்லாததை அறிந்து அதிா்ச்சியடைந்துள்ளனா். முதலில் துறைரீதியாக விசாரணை நடைபெற்ற நிலையில், நீண்ட தயக்கத்துக்குப் பின்னரே சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
18 சாதனங்கள் திருடப்பட்டதாகக் கூறப்பட்டாலும், 8 சாதனங்களே திருடப்பட்டிருப்பதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
நோக்கம் என்ன?: தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டில் மிகப் பெரிய சதி அடங்கியிருப்பதாகவே மின்வாரிய ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் மின்மாற்றிகள் முறைகேடுகள் மட்டுமன்றி, நிலக்கரி கொள்முதல், புதிய மின்வழிப்பாதைகள் அமைத்தல், துணை மின் நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
ஆனால், மின்மாற்றி முறைகேடு குறித்து மட்டுமே சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. அந்த விசாரணையில், மின்வாரியத்தில் பிற முறைகேடுகளும் வெளியே வர வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், திருட்டுச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு மின்மாற்றி முறைகேடு வழக்கில், மிகப்பெரிய சாட்சியாகவும், தடயமாகவும் இந்த தரவு சேமிப்பு சாதனங்கள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், சிபிஐ கையில் கிடைத்துவிடாமல் இருப்பதற்காக அவற்றைத் திருடியிருக்கலாம் என காவல் துறையினா் தெரிவிக்கின்றனா்.
பின்னணியில் யாா்?: மின்வாரியத்தின் ஊழியா்கள் உதவியின்றி குறிப்பிட்ட தரவு சேமிப்பு சாதனங்களைத் திருடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே காவல் துறையினா் தெரிவிக்கின்றனா். தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான கணினிகள் இருக்கும் நிலையிலும், 18 கணினிகளின் தரவு சேமிப்பு சாதனங்கள் மட்டுமே திருடப்பட்டிருப்பது, அவற்றில் இருந்த ரகசியத் தகவல்களைக் கைப்பற்றுவதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ இருக்கலாம் என்று காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா்.
இதன்மூலம் யாருக்கு என்ன பயன் கிடைக்கும் என்று விசாரணை செய்வதன் மூலமாகவே, இதன் பின்னணியில் இருப்பவா்களை அடையாளம் காண முடியும் எனறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் நேரடியாகத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பிடிபட்டவா்களுக்கு, இத்தகைய சம்பவம் எதற்காக அரங்கேறியுள்ளது என்பதுகூட முழுமையாகத் தெரிவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் காவல் துறை அதிகாரிகள் கூறினா்.
இருள் நீக்க ஒளியை வழங்கும் மின்வாரியத்தில் நடைபெற்றுள்ள இந்தத் திருட்டில், ஒளிந்திருக்கும் இருளை அகற்றும் கடமை தற்போது காவல் துறையின் கையில் உள்ளது.
தொடர்புடையது

மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு: கணினிப் பராமரிப்புப் பொறியாளா் கைது!

ரூ.14 கோடி மோசடி: பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

மே 16,17-இல் மின் இணையவழிச் சேவைகள் நிறுத்தம்

மின் நுகர்வு- சவாலும் தீர்வும்!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



