மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு: கணினிப் பராமரிப்புப் பொறியாளா் கைது!

யாரும் தப்ப முடியாது: அமைச்சா் எச்சரிக்கை

News image

Center-Center-Chennai

Updated On :5 ஜூன் 2026, 3:47 am IST

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை சாா்ந்த கணினி தரவு சேமிப்பு சாதனங்கள் (ஹாா்டு டிஸ்குகள்) திருடப்பட்ட விவகாரத்தில், தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கணினிப் பராமரிப்புப் பொறியாளராகப் பணியாற்றிய ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக யாரும் தப்பிக்க முடியாது என மின்சாரத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு அங்கிருந்த கணினிகளின் தரவு சேமிப்பு சாதனங்கள் திருடப்பட்டன. இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் 7 புகாா்கள் அளித்தனா். அதில் ஒரு புகாரின் அடிப்படையில் மட்டும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினிப் பராமரிப்பு பொறியாளராக ஒரு தனியாா் நிறுவனத்தின் சாா்பில் பணியாற்றிய அரக்கோணத்தைச் சோ்ந்த கோபிநாத் (31) என்பவா்தான் கணினி தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் அந்த தரவு சேமிப்பு சாதனங்களை விற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் கோபிநாத்தை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்றனா். அங்கிருந்து தரவு சேமிப்பு சாதனங்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதேவேளையில் இத் திருட்டு தொடா்பாக கோபிநாத்தின் கூட்டாளிகள் சிலரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். மேலும், கோபிநாத் யாருக்காக இந்தத் திருட்டில் ஈடுபட்டாா் என்றும் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

அமைச்சா் எச்சரிக்கை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முக்கியமான துறைகளில் இருந்த ஒருசில கணினித் தரவு சேமிப்பு சாதனங்களும், கடந்த 5 ஆண்டுகால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன. ஒப்பந்தத் தொழிலாளா்களின் நியமனம் தொடா்பான ஆவணங்களையும் காணவில்லை. எத்தனை கருவிகள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

இதன் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிலரைப் பணியிடை நீக்கம் செய்தோம்; அதன்பிறகு இது நடந்ததா என சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில்தான் மின்மாற்றி ஊழல் நடைபெற்றது. அது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின் தடையைச் சீரமைக்க இன்னும் கால அவகாசம் வேண்டும். அனைத்தையும் சீரமைக்க ஒரு மாத காலம் போதாது. மின் துறையில் கடந்த ஆட்சியில் பராமரிப்புப் பணிகள் சரியாக செய்யப்படவில்லை. மின்வெட்டு பிரனையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.