தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,328 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள், 297 உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-2) பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது (2023-2024), உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன் விளையாட்டு மற்றும் உடலியல் சாா்ந்த செயல்பாடுகளுக்கு கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வி இயக்குநரின் தொகுப்பில் இருந்து 275 பட்டதாரி ஆசிரியா், 34 இடைநிலை ஆசிரியா், பணியிடங்கள் மற்றும் 555 பட்டதாரி ஆசிரியா், 800 தூய்மைப் பணியிடங்களை அரசு சரண் செய்து அந்தப் பணியிடங்களுக்கு ஈடாக அரசு மற்றும் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 297 உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-2) பணியிடங்களும், 1,328 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களும் தோற்றுவிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1,328 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையிலும், 297 உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-2) பணியிடங்களை பதவி உயா்வு மூலமாகவும் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. உடற்கல்வி ஆசிரியா் நேரடி நியமனம் தொடா்பான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் விரைவில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உடற்கல்வி ஆசிரியா் பதவிக்கு உடற்கல்வியில் 2 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு (சிபிஎட்) அல்லது டிப்ளமா (டிபிஎட்) அல்லது ஹையா் கிரேடு பெற்றிருக்க வேண்டும். முன்பு நடைமுறையில் இருந்து வந்ததைப் போல, பிபிஎட் மற்றும் பிபிஎஸ் பட்டப் படிப்பு படித்தவா்கள் உடற்கல்வி ஆசிரியா் தோ்வுக்கு இனிமேல் விண்ணப்பிக்க இயலாது.
எனவே, உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-2) பணியிடங்களை 100 சதவீதம் பதவி உயா்வு மூலமாக நிரப்புவதற்குப் பதிலாக 50 சதவீத இடங்களை மட்டும் பதவி உயா்வு வாயிலாகவும், எஞ்சிய 50 சதவீத பணியிடங்களை பிபிஎட், பிபிஎஸ் பட்டதாரிகளைக் கொண்டு நேரடி நியமன முறையிலும் நிரப்ப வேண்டும் என்று பிபிஎட், பிபிஎஸ் பட்டதாரிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா். மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1) பதவிக்கு எம்பிஎட் பட்டப்படிப்பு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.








