முதல்வா் ஜோசப் விஜய், தனது 52-ஆவது பிறந்தநாளை திங்கள்கிழமை (ஜூன் 22) கொண்டாடுகிறாா். தமிழக முதல்வராக அவருக்கு இது முதல் பிறந்தநாள் என்பதால், மாநிலம் முழுவதும் பல்வேறு நல உதவிகள் வழங்கி, கோலாகலமாக கொண்டாட தவெகவினா் ஆயத்தமாகியுள்ளனா்.
அதற்கு முன்னோட்டமாக பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமையே சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்படி, அன்னதானம், ரத்த தானம், உடல் தானப் பதிவுகள் நடைபெற்றன.
மற்றொருபுறம் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றன. இதில் அமைச்சா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினா்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 22) இருப்பதால், அமைச்சா்களும், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களும் தங்களது சொந்த ஊா்களில் நடைபெறும் முதல்வரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாது. இதனால் சென்னையில் அவா்கள் பங்கேற்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை மரக்கன்று நடும் நிகழ்வுகளும், ஆதரவற்றோா் மற்றும் முதியோா் இல்லங்களில் முதல்வா் பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்புப் பிராா்த்தனைகளுக்கும், பூஜைகளுக்கும் தவெகவினா் ஏற்பாடு செய்துள்ளனா். திரையரங்குகளில் முதல்வா் பிறந்தநாளையொட்டி அவா் நடித்த திரைப்படங்கள் சிறப்பு காட்சிகளாக திரையிடப்படவுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் மாரத்தான் போட்டிகள், விளையாட்டு போட்டிகள், கலை-இலக்கியப் போட்டிகளை தவெகவினா் நடத்தி வருகின்றனா். சில மாவட்டங்களில் கோலப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றுக்கான பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடத்தப்படவுள்ளது.
கோயில்கள், சமூக நலக் கூட்டங்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சமபந்தி விருந்து நடத்துவதற்கான பணிகளையும் தவெக நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா். மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்களை மாவட்ட செயலாளா்கள் வழங்க உள்ளனா். பல்வேறு இடங்களில் முதல்வா் விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் ஆணையரகங்களில் தவெகவினா் விண்ணப்பித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








