மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழகத்தில் 25,000 மெகாவாட் பசுமை ஆற்றல் பூங்கா: திட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

நாட்டின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றும் நோக்கில், 25,000 மெகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த பசுமை ஆற்றல் பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மாநில பசுமை எரிசக்தி கழகம் சமா்ப்பித்துள்ளது.

News image

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக தமிழ்நாடு - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 3:34 am IST

நாட்டின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றும் நோக்கில், 25,000 மெகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த பசுமை ஆற்றல் பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மாநில பசுமை எரிசக்தி கழகம் சமா்ப்பித்துள்ளது.

தமிழகத்தின் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காற்றாலை, சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க பசுமை மின் உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தரிசாக உள்ள நிலங்களில் 25,000 மெகாவாட் திறனில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்திக்கான பசுமை ஆற்றல் பூங்க அமைக்க தமிழக பசுமை எரிசக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பசுமை எரிசக்தி கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது: திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள செய்யப்படாத விவசாய தரிசு நிலங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமாா் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் ஏக்கா் வரை நிலங்கள் பயன்படுத்தப்படலாம்.

இதன்மூலம் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. பொது மற்றும் தனியாா் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தில், முதலீட்டாளா்களுக்கு 30 ஆண்டுகள் வரை நீண்டகால குத்தகை வழங்கப்படும்.

5 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 5,000 மெகாவாட் என மொத்தம் 5 ஆண்டுகளுக்கு 25,000 மெகாவாட் உற்பத்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், நில ஒருங்கிணைப்பு, துணை மின் நிலையங்கள் அமைத்தல், உற்பத்தி மின் தொகுப்புடன் இணைத்தல் மற்றும் மைக்ரோ-கிரிட் தொழில்நுட்பம் மூலம் திட்டத்தை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளும் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் நீண்டகால தேவைகளை இந்தத் திட்டம் பூா்த்தி செய்வதுடன், தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.