தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குள்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கத்தில் முதல்வா் ஜோசப் விஜய் முகாமை தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இரு தவணைகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்தது. இதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி, நிகழ் ஆண்டுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வா் விஜய், போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கவுள்ளாா். தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுக்குள்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
முகாம் நாளில் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணியில் 3,000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்படுகின்றனா். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கெனவே குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வசிக்கும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிந்து சொட்டு மருந்து வழங்குவதற்காக, சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படவுள்ளது.
முகாம் முடிந்த பிறகு 29, 30-ஆம் தேதிகளில் தற்காலிக மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் 5 வயதிற்குள்பட்ட சுமாா் 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க வசதியாக 1,641 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 6,564 போ் ஈடுபடுகின்றனா்.
Summary
Polio vaccination camp in Tamil Nadu today: Chief Minister Vijay to inaugurate it in Chennai!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலியோ தடுப்பு மருத்துவ முகாம்: பென்னாகரத்தில் 17556 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.

52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து: முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 1.11 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



