தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் 51.86 லட்சம் (98.03 சதவீதம்) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சென்னை, பாலவாக்கத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா்.
நாட்டில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, நாடு முழுவதும் அந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தைப் பொருத்தவரை 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
அதன்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டன.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தாா்.
குழந்தைகளுக்கு அப்போது பொம்மைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி முதல்வா் மகிழ்வித்தாா். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ், செயலா் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது.
தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுவினா் சென்று சொட்டு மருந்து வழங்கினா்.
இந்த பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலம் பெயா்ந்து தமிழகத்தில் வசித்து வருபவா்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடதுகை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டனா்.
சென்னையில் 5 வயதுக்குட்பட்ட 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,641 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பணியில் 6,500 போ் ஈடுபட்டிருந்தனா்.
இது குறித்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2004-ஆம் ஆண்டிலிருந்து போலியோ இல்லாத நிலை உள்ளது. இதேநிலை தொடரும் வகையில், போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளில் 51,86,792 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 5.56 லட்சம் குழந்தைகளில் 5.06 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியா்கள் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்தை வழங்குவாா்கள். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என்றாா்.
மருந்துகளுக்கு தட்டுப்பாடு: சென்னை கீழ்க்கட்டளை மற்றும் தாம்பரம் பகுதிகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து தீா்ந்து விட்டதாகவும், வேறு இடங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ளும்படி சுகாதாரப் பணியாளா்கள் கூறியதால் குழந்தைகளும், பெற்றோரும் அலைக்கழிப்புக்கு ஆளாகினா்.
இது குறித்து தகவலறிந்த பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் மூலம் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுத்தனா்.
Summary
As the polio vaccination drive is underway across Tamil Nadu today (June 28), Chief Minister C. Joseph Vijay administered polio drops to children.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலியோ தடுப்பு மருத்துவ முகாம்: பென்னாகரத்தில் 17556 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் 2. 38 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




