திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், முதல்வர் ச. ஜோசப் விஜய், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவு, திரையுலகுக்கு பேரிழப்பாகும்.
தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது.
அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ச. ஜோசப் விஜய்
முதல்வர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் கே.பாக்யராஜ் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதல்வராக மட்டுமின்றி, அவரது ரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார் என கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக)
பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய கே பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
புரட்சித் தலைவரும் பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
அன்புமணி(பாமக)
தமிழ்த் திரையுலகின் தளகர்த்தர்களில் ஒருவரும், சிறந்த திரைக்கதையாசிரியர் என போற்றப்பட்டவருமான இயக்குநர் கே.பாக்யராஜ் சனிக்கிழமை(ஜூன் 27) காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமான அதிர்ச்சியிலிருந்து தமிழ்த் திரையுலகம் இன்னும் மீளாத நிலையில், அவரது மாணவரும், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராக திகழ்ந்தவருமான பாக்யராஜும் மறைந்திருப்பது சோகத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பாரதிராஜாவின் பள்ளியில் உருவான பாக்யராஜ், தமக்கென்று தனிப் பள்ளியை உருவாக்கி ஏராளமான புதிய இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகளை அறிமுகம் செய்தார். திரையுலகில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பல கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது அவரின் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
திரையிலகில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை என திரைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் வல்லமை பெற்று பன்முகக் கலைஞராக திகழ்ந்தவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
திரையுலகில் எவரும் பேசத் துணியாத பல உண்மைகளை எவர் மனமும் புண்படாதவாறு நகைச்சுவையுடன் திரைமொழியாக பேசியவர். திரைப்படங்களின் வாயிலாக சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் கூறியவர். 45 ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய திரைப்படங்களை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியாகவும், இன்றைய காலத்திற்கு பொருந்தும் வகையிலும் இருக்கும் என்பது தான் காலத்தைக் கடந்த இயக்குநர் அவர் என்பதற்கு சான்று ஆகும். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய முதல்வர்களின் அன்பைப் பெற்றிருந்த கே.பாக்யராஜ், எம்.ஜி.ஆரால் அவரது கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர்.
திரையிலகிற்கு வெளியில் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் கால் பதித்த பாக்யராஜ், பின்னர் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிலும் சில காலம் பயணித்திருக்கிறார். பாக்யா என்ற பல்சுவை வார இதழையும் தொடங்கி பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர். அரசியல் தவிர தாம் கால்பதித்த அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்ற பெருமையும், சிறப்பும் அவருக்கு உண்டு.
இயக்குநர் கே.பாக்யராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சு. திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)
திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகருமான சகோதரர் திரு. கே.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார் எனும் செய்தி அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் தருகிறது.
கே. பாக்யராஜ், அமரர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மாணவராக உருவாகி மிகச் சிறந்த கதாசிரியர், ஒப்பற்ற திரைக்கதை ஆசிரியர், சிறந்த வசனகர்த்தா, பத்திரிக்கையாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், கதாநாயகர் குணச்சித்திர நடிகர் என சிறப்பாக திரைத் துறையில் பல ஆண்டுகள் வலம் வந்தவர்.
புரட்சித் தலைவர், புரட்சி நடிகர் அமரர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் திரையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்டு, அவரது பாராட்டைப் பெற்றவர். அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், திகழ்ந்தவர், நகைச்சுவை உணர்வும், எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் நிறைந்தவர். அனைவரிடமும், அன்போடும், பண்போடும் நயத்தகு நாகரீகத்தோடும், பழகக் கூடிய நல்ல நண்பர். பல ஆண்டுகளாக எனது அன்பிற்கினிய நண்பர். பல புதுமுக நடிகர்களை, பல புதிய இயக்குநர்களை உருவாக்கியதோடு, திரு. அமிதாப்பச்சன் உட்பட பல அகில இந்திய திரைப்பட உச்ச நடிகர்களையும் இயக்கியவர், பன்முகத்தன்மை கொண்ட ஆற்றலாளர்.
அன்னாரின் பிரிவு அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் திரையுலகிற்கும் மாபெறும் இழப்பாகும். அன்னாரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலை உலகினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது இறுதி சடங்கை அரசு மரியாதையுடன் நடைபெற செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மு.வீரபாண்டியன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)
திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் (73) இன்று சனிக்கிழமை சென்னையில் காலமானர் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளால் கோயிலில் 1953 ஜனவரி 7 ஆம் தேதி பிறந்த பாக்யராஜ் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வளர்ந்தவர்.
அண்மையில் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படமான “16 வயதினிலே” என்ற திரைப்படத்தில், அவரது உதவியாளராக திரையுலகில் நுழைந்தவர் பாக்யராஜ். தொடர்ந்து வசனக் கர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக வளர்ந்து, தனது தனிமுத்திரையை பதித்து அழியாப் புகழ் பெற்றுள்ளார்.
திரைத்துறையில் மட்டும் அல்லாமல், அரசியலிலும் கால்பதித்து நடைபோட்டவர். அஇஅதிமுக உறுப்பினராக இணைந்து செயல்பட்டவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சி அமைத்து செயப்பட்டவர். இந்தக் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, அங்கிருந்து விலகி திமுகழகத்தில் சேர்ந்து சில காலம் செயல்பட்டார். பிறகு கட்சி சார்ந்த அரசியலில் இருந்து விலகி விட்டார்.
பத்திரிகையாளராக, “பாக்யா” மாத இதழ் தொடங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார். கொங்கு நாட்டு பேச்சு வழக்கில், அவரது இயல்பான பேச்சு பலரையும் பரவலான ரசிகர் வட்டத்தை உருவாக்கித் தந்தது.
பாக்யராஜிடம் பணியாற்றியவர்கள் பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன் போன்றோர் முன்னணி இயக்குநர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் பூர்ணிமா பாக்யராஜ், மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் திரையுலக நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன்(பாஜக)
தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.
அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
அண்ணாமலை(இது நம்ம இயக்கம்)
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, கே. பாக்கியராஜ், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
பாக்கியராஜ் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
இயக்குநர் விக்ரமன்
நான் இயக்கிய முதல் படமான புது வசந்தம் பட பூஜைக்கு பல விஐபி-க்குளுக்கு பத்திரிகை வைத்து அழைத்தேன். பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த விஐபி-ம் வரவில்லை. அன்று வந்த ஒரேயொரு விஐபி பாக்யராஜ் சார் தான். அவருக்கு அன்று அவரசு போலீஸ் 100 பட ஷீட்டிங் இருந்தது. ஆனாலும் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகள்வுகளில் அவர் கலந்துகொள்ளாமல் இருந்ததே இல்லை. அப்படிப்பட்ட உள்ளம் கொண்ட அவரை இழந்து தவிக்கிறேன் என கூறியுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி
நேற்று முன்தினம் கோவாவில் குஷ்பு குடும்பத் திருமண விழாவில் நாங்கள் ஒன்றாக இருந்தோம், சிரித்து நகைச்சுவையாகப் பேசி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.
அவர் மறைந்துவிட்டார் என்ற செய்துயை நம்ப முடியவில்லை என சீரஞ்சிவில் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
நடிகை சிம்ரன்
நகைச்சுவை, குடும்பப் பாசம், சமூகச் சிந்தனை ஆகியவற்றை தனது படைப்புகள் மூலம மக்களிடம் கொண்டு சென்றார்.
தமிழ் திரையுலகம் தனது மிகச் சிறன்த படைப்பாளிகளில் ஒருவரை இழந்துள்ளது என கூறியுள்ளார்.
Summary
Tamil film personality K. Bhagyaraj passes away...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








