திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் பலியான ரிதன்யாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா, கடந்த 2025 ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரதட்சணை கொடுமை தாங்காமல் தனது தந்தைக்கு வாட்ஸ்ஆப்பின் மூலமாக ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு கோயிலுக்குச் செல்லும் வழியில் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏழு நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட தினமான இன்று (ஜூன் 28) ரிதன்யாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு ரிதன்யாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
மகளின் இழப்பு தாங்காமல் ரிதன்யாவின் பெற்றோர் மலர்தூவி, கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தியது காண்போர் மனதை கலங்கடிக்கச் செய்வதாக இருந்தது.
இதையடுத்து, பத்திரிகையாளர்களை ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் அஞ்சலி செலுத்த வந்த பசும்பொன் மக்கள் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர்.
அண்ணாதுரை பேசியதாவது, "எனது மகள் ரிதன்யா மீண்டும் வரப்போவதில்லை. ஆனால், அவளைப் போல உலகத்தில் உள்ள எந்தவொரு பெண்ணுக்கும் இனி இப்படியொரு கொடுமை நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் இந்த சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும்வரை இந்தப் போராட்டம் ஓயாது" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை திருப்திகரமாக இல்லை எனக் குற்றம் சாட்டிய அவர், ஒரு எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஓர் உயரதிகாரி மூலம் இந்த வழக்கை மறுவிசாரணை செய்து, புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு வந்துள்ள நிலையில், விசாரணைக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்பதாகவும் அண்ணாதுரை கூறினார்.
இசக்கிராஜா பேசியதாவது, "பெண் பிள்ளைகளைத் தெய்வமாக மதிக்கும் தமிழ் மண்ணில், வரதட்சிணைக் கொடுமையால் ஒரு பட்டதாரிப் பெண் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது என்றார். உயிரிழப்பதற்கு முன் ரிதன்யா பேசிய ஆடியோ பதிவே ஒரு வலுவான 'மரண வாக்குமூலம்' ஆகும்.
பெண் பிள்ளைகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வரும் முதல்வர் ஜோசப் விஜய், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முறையான நீதி விசாரணை மூலம் தகுந்த நீதி கிடைக்கச் செய்வதே, எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் இதுபோன்றதொரு கொடுமை நிகழாமல் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும்" என்று இசக்கிராஜா பேசினார்.
Summary
First-year memorial for Rithanya, a victim of dowry harassment in Tiruppur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: பெண் பலி

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கு: விசாரணை அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு






