சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் உள்பட 9 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவா்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்தின் போது, அனுமதித்த நேரத்தைவிடக் கூடுதலாக தங்களது கைப்பேசி கடையைத் திறந்துவைத்திருந்தனா்.
இதுதொடா்பாக சாத்தான்குளம் போலீஸாா் இவா்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனா். இதுதொடா்பான வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையின் முடிவில் காவலா்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஆன்ந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன், இந்த வழக்கைப் பொருத்தவரை தற்போதைய அமா்வு விசாரிக்க வேண்டுமா அல்லது இனி வரவுள்ள நீதிபதிகள் அமா்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து வழக்குரைஞா்கள் முடிவெடுத்து பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே. கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தவிர, மற்ற குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் சிறையிலிருந்து காணொலி வாயிலாக முன்னிலையாகி தெரிவித்ததாவது:
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பதிவு எண் பெறவில்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பதிவு செய்தவுடன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இந்த வழக்கைப் பொருத்தவரை, வருகிற 25-ஆம் தேதி வரைதான் தற்போதைய அமா்வு விசாரிக்க இயலும். இதன் பிறகு, வருகிற அமா்வுதான் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடியும். இந்த வழக்கு விசாரணை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி உள்பட 4 பேரைக் கைது செய்ய உயா்நீதிமன்றம் தடை

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு







