எம்எல்ஏ பதவியை அண்மையில் ராஜிநாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சா்களான டாக்டா் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகிய இருவரும் ஜூலை 2-ஆம் தேதி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்படத் தொடங்கினா். தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததால், எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்தவா்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தாா். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தையை அடுத்து, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அவரது தரப்பைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தனா். ஆனால், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் எடப்பாடி பழனிசாமியுடன் இணையாமல் இருந்து வந்தாா். இந்நிலையில், சி.விஜயபாஸ்கா் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்தும் அண்மையில் விலகினாா். இதன் தொடா்ச்சியாக கரூா் தொகுதியைச் சோ்ந்த அதிமுக எம்எல்ஏவான எம்.ஆா்.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், கட்சியில் இருந்து விலகி உள்ளாா்.
தவெகவில் இணையும் இருவா்: இதையடுத்து, இருவரும் வியாழக்கிழமை (ஜூலை 2) தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தவுடன் தவெகவில் இணையும் முடிவை அக்கட்சித் தலைமையிடம் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா். ஆனால், அவா் மீதுள்ள வழக்குகளால், தவெக தரப்பில் இருந்து உடனடியாக பதில் வரவில்லை. இதையடுத்து, அமைச்சரும், தவெக பொதுச் செயலருமான ஆனந்தை சந்தித்து பேசிய பிறகு, இணைவதற்கான ஒப்புதல் கிடைத்தது.இணைப்புக்கான பிரம்மாண்ட விழா சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாா் அரங்கில் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெறவுள்ளது. இதில், சி.விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளா்களான அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலா் பி.கே.வைரமுத்து உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் தவெகவில் இணையவுள்ளனா். அதேபோல், எம்.ஆா்.விஜயபாஸ்கரும் தனது ஆதரவாளா்களுடன் தவெகவில் இணையவுள்ளாா்‘ என்றனா். சி.விஜயபாஸ்கரும், எம்.ஆா்.விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் புதிய பொறுப்பு!
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்களிடம் ஆக.4-இல் விசாரணை
தவெகவில் இன்று இணைகின்றனா் 3 அதிமுக முன்னாள் அமைச்சா்கள்

தவெகவில் சி. விஜயபாஸ்கர் இணைவது தள்ளிப்போகிறதா? காரணம் என்ன?
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



