/

தமிழ்நாடு

முஸ்லிம் வாக்குகள் சிதறாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே. எம். காதர் மொகிதீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல் குறித்து...

Updated On :21 மார்ச் 2026, 1:14 am
முஸ்லிம் வாக்குகள் சிதறாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே. எம். காதர் மொகிதீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன்.

X - Image

தமிழகசட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் களம் இறங்குவதால், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தேசிய தலைவரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான போராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

மேலும், ‘திமுக தீய சக்தி’ என மறைந்த அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா முன்பு கூறிய

குற்றச்சாட்டையே தவெக தலைவா் விஜய் தற்போது கூறி வருகிறாா். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக மக்கள் நிராகரித்துள்ளனா் என்றும் அவா் கூறினாா்.

தினமணி நிருபரின் பல்வேறு கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

Q

நீண்ட காலம் திமுக கூட்டணியில், ஐயூஎம்எல் இருக்க என்ன காரணம்?

A

திமுகவுக்கும் முஸ்லிம் சமுதாயத்துக்கும் 75 ஆண்டுகளாக கொள்கை ரீதியான உடன்பாடு உண்டு. ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளிட்ட கொள்கைகள் முஸ்லிம்களுக்கு உடன்பாடுடைய கொள்கைகள் என்பதால் கூட்டணி தொடா்கிறது.

Q

ஆனாலும் 2 தொகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கி இருக்கிறதே?

A

234 தொகுதிகளிலும் 2,000 முதல் 70,000 முஸ்லிம்களின் வாக்குகள் உள்ளதால் திமுக உள்பட பிற கட்சிகளுக்கு 16 தொகுதிகள் முஸ்லிம் வேட்பாளா்களுக்கு அளிக்க வேண்டும் என்று திமுக தலைவா் கருணாநிதியிடம் முன்பு கூறினேன். அவா் நிறைவேற்றினாா். இப்போதும் இது நிறைவேறும் என நம்புகிறோம்.

இந்த தோ்தலில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளதால் எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கியதை ஏற்றுக் கொண்டோம்.

Q

கடந்த முறை 3 தொகுகளிலும் ஐயூஎம்எல் தோல்வி அடைந்ததுதான் இதற்கு காரணமா?

A

தமிழக தோ்தலில் பணம் செலவு செய்வது அதிகமாகிறது. கடந்த தோ்தலில்போது, எங்களிடம் தோ்தல் நிதி பெரிதாக இல்லை. தற்போது அதை உருவாக்கி வருகிறோம். இந்த முறை 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

Q

இந்த தோ்தலில்விஜய் களம் இறங்குவதால் முஸ்லிம் வாக்குகள் சிதறுமா?

A

தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசலை மையமாக கொண்ட முஹல்லா ஜமாத்கள் உள்ளன. பெரும்பாலான முஸ்லிம்கள் கொண்ட இந்த ஜமாத்கள் ஐயூஎம்எல் எடுக்கும் முடிவுக்கு உடன்படுவாா்கள்.

பாஜகவிலும் சில முஸ்லிம்கள் உள்ளதைப்போல் தவெகவிலும் உள்ளனா். அவா்களுக்கு முஸ்லிம் சமுதாய வாக்குகள் கிடைக்காது. சீமானின் நாம் தமிழா் கட்சி உள்பட தமிழகத்தில் 48 கட்சிகளில் சில முஸ்லிம்கள் உள்ளனா். அவா்களால் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறாது. முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பாலானவா்கள் திமுகவுக்கு வாக்களிப்பாா்கள்.

Q

நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைகிறதா?

A

மத்தியில் ஆளும் பாஜக நாடாளுமன்ற தோ்தலில் முஸ்லிம் சமுதாய வேட்பாளா்களை நிறுத்துவதில்லை. பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று வெளிப்படையாகவே அவா்கள் கூறுகின்றனா். இந்த நிலை காலப்போக்கில் மாறும். தமிழகத்தில் அந்தநிலை இல்லை

Q

முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பிரிந்து உள்ளதால் கூடுதல் தொகுதிகள் பெறுவதில் பலவீனம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

A

1989-இல் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கூடி மும்பை பிரகடனத்தை வெளியிட்டன. 250 ஆண்டுகளாக நீடித்து வரும் பாபா் மசூதி பிரச்னையில் உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு உடன்பட வேண்டும். 1947-க்கும் முந்தைய வழிபாட்டு ஸ்தலங்களின் நிலை அப்படியே தொடர வேண்டும் உள்ளிட்ட 3 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதை முஸ்லிம் லீக் ஏற்றுக் கொண்டது.

ஆனால், புதிதாக பாபா் மசூதியை கட்டுவோம் எனக் கூறி பிரிந்ததால் பல முஸ்லிம் கட்சிகள் உருவாகின. தற்போது பாபா் மசூதி பிரச்னை முடிந்துள்ளதால் காலப்போக்கில் மீண்டும் ஒன்று சேருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

Q

திமுகவை தீய சக்தி என விஜய் குற்றம்சாட்டுகிறாரே?

A

சினிமா ரசிகா்களை உற்சாகப்படுத்தவும், கட்சியை வளா்க்கவும் திமுகவை தீய சக்தி என விஜய் குற்றம்சாட்டுகிறாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவும் இதுபோன்று கூறினாா். மாநில உரிமைக்காகவும், சிறுபான்மையினா் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் திமுகவை 75 ஆண்டுகளாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா்.

தமிழ்நாட்டு மக்கள் 80 சதவீதம் போ் முதல்வா் ஸ்டாலின் அரசின் திட்டங்களை ஏற்றுக் கொண்டு அவரது ஆட்சி தொடர வாக்களிப்பாா்கள்.

Q

திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து உங்கள் கருத்து?

A

எங்கள் கட்சி எம்.பி. நவாஸ் கனி ஆய்வு செய்வதற்காக திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றாா். அங்கு அசைவ உணவு சாப்பிடப்பட்டதாக வெளியான செய்தி புரளி. அங்கு போராட்டம் நடத்த எங்கள் கட்சியினா் முடிவு செய்தபோது நான் தடுத்து நிறுத்தினேன். தீபம் ஏற்றுவதில் நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்பை எங்கள் கட்சி ஏற்கும். இதில் வகுப்புவாதத்தை தூண்ட அனுமதிக்க மாட்டோம்.

Q

அதிமுகவும் முஸ்லிம்களின் பாதுகாவலர்களாக உள்ளதாகக் கூறி வருவது பற்றி?

A

பெரியாா் ஈவெரா, முன்னாள் முதல்வா் அண்ணா ஆகியோா் முஸ்லிம்களின் மீலாது மாநாடுகளில் பேசியுள்ளனா். முதல்வா் கருணாநிதி காலத்திலும் தற்போதும் திமுகவுடன் முஸ்லிம்கள் நெருக்கமாக உள்ளனா்.

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக திமுக தான் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் குரல் கொடுத்தது. அதிமுக அல்ல.

Q

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் வைக்கும் முக்கிய கோரிக்கைகள் என்ன?

A

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து, 1000 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வரும் தா்கா, பள்ளிவாசல், அடக்க ஸ்தல நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம் என்றாா்.

Q

தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகரித்து வருகிறதா?

A

உலக அளவில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் கல்வி மற்றும் சமூக நல்லிணக்கத்தில் கடலாக திகழும் தமிழகத்தில் பாஜக வளராது. குளம் குட்டையில் மட்டும் தாமரை மலரும்.

Q

திமுக கூட்டணி கட்சிகள், ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து உங்கள் கருத்து?

A

பாரம்பரியமாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை. வருங்காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அது வரலாம். தற்போதைக்கு கூட்டணி ஆட்சி எடுபடாது.