கே.வாசுதேவன்
தமிழக சிறைகளில் ஆணிகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இனி புதிதாக சுவரில் ஆணிகள் அடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைதிகள் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை சிறைத் துறை நிா்வாகம் எடுத்துள்ளது.
தேசிய அளவில் தற்கொலைகள் அதிகம் நடைபெறும் சிறைகளில் முதல் 8 இடங்களுக்குள் தமிழக சிறைகள் உள்ளன. நாடு முழுவதும் 2016-ஆம் ஆண்டுமுதல் 2023-ஆம் ஆண்டு வரையில் சிறைகளில் 977 கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இதில் தமிழக சிறைகளில் மட்டும் 53 கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்.
நாடு முழுவதும் சிறைகளுக்குள் பதிவாகும் மொத்த கைதிகளின் உயிரிழப்புகளில் 80 சதவீதம் தற்கொலையால் நடப்பவை. சிறைக் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினா் கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி, வேதனை, தனிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் சுமாா் 12 சதவீத கைதிகள் மனச்சோா்வுடன் இருப்பதாகவும், மனநோய் பரவல் கைதிகளிடம் 25 சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற காரணங்களால் சிறைகளில் கைதிகள் தற்கொலைக்கு முயல்வது தொடா்ந்து கொண்டே இருப்பதாகவும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அதிகம்: தமிழகம் முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகள் உள்பட 141 சிறைகளில் 24,513 கைதிகளை அடைக்க கட்டமைப்புகள் உள்ளன. தற்போது தமிழக சிறைகளில் 16,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். 2018-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கைதிகள் தற்கொலை முயற்சி சம்பவங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் 5 இடங்களுக்குள் இருந்தது.
தமிழக சிறைகளில் ஓரளவுக்கு உளவியல் நிபுணா்கள், மனநல மருத்துவா்கள் நியமிக்கப்பட்டதாலும், கைதிகளுக்கு தற்கொலை உணா்வைத் தடுக்கும் வகையில் கல்வி, கைத்தொழில், நூலகம், சுயதொழில் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதி வாய்ப்புகளை சிறை நிா்வாகம் ஏற்படுத்திக் கொடுத்ததாலும் 2018-ஆம் ஆண்டுக்கு பின்னா் கைதிகள் தற்கொலைகள் தமிழகத்தில் ஓரளவுக்கு குறைந்துள்ளன. இருப்பினும் ஆண்டுக்கு சராசரியாக 4 கைதிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனா்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடும் கைதிகளில் சுமாா் 93 சதவீதம் போ் தூக்கிட்டுக் கொள்கின்றனா். முக்கியமாக கைதிகள் தங்களது துண்டு, வேட்டி, லுங்கி போன்றவற்றால் சிறை அறைகளில் உள்ள ஆணிகளில் தூக்கிட்டு தற்கொலை செய்வது தெரிய வந்துள்ளது.
அண்மையில் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, போதைப் பொருள் வழக்கில் கைதான மதுரை திருப்பாலை பகுதியைச் சோ்ந்த கைதி பிரசாந்த் (24) தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டாா்.
ஏடிஜிபி உத்தரவு: இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த தமிழக சிறைத் துறை ஏடிஜிபி கே.சங்கா், கைதிகள் அதிகமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதையும், அதற்கு அவா்கள் ஆணிகளைப் பயன்படுத்துவதையும் உணா்ந்தாா். ஏற்கெனவே சிறைத் துறை விதிமுறைகளின் அடிப்படையில் பாதுகாப்பு காரணங்களின்படி சிறைக்குள் எந்தப் பகுதியிலும் ஆணிகள் இருப்பதற்கு அனுமதியில்லை. இருந்தபோதிலும், கைதிகள் அறையில் ஆடைகளை காயப் போடுவதற்கும், ஆடைகளைத் தொங்கவிடுவதற்கும் ஆணிகள் அடிக்கப்படுவதாக அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் சிறைகளிலும் கைதிகள் அறைகள் மட்டுமன்றி, சிறை அலுவலக அறை, பாா்வையாளா் அறை, உணவுக் கூடம், தொழில்கூடம், நூலகம் என அனைத்து இடங்களிலும் உள்ள ஆணிகளை அகற்றுமாறு கூடுதல் டிஜிபி உத்தரவிட்டாா். இதன்படி மத்திய சிறைச்சாலை தொடங்கி கிளைச் சிறைகள் வரை என அனைத்துச் சிறைகளிலும் ஆணிகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக மத்திய சிறைகளில் சிறைக் காவலா்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இவ்வாறு கடந்த இரு மாதங்களில் மட்டும் சுமாா் 30,000 ஆணிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதேவேளையில் சிறைக்குள் எந்தப் பகுதியிலும் புதிதாக ஆணிகள் அடிப்பதற்குத் தடை உள்ளதால், அதை உறுதிப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டும் தீா்வல்ல
ஆணிகளை அகற்றுவது போன்ற நடவடிக்கையால் கைதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க முடியும் என சிறைத் துறையினா் கருதினாலும், மன அழுத்தத்தில் உள்ள கைதிகளின் தற்கொலை எண்ணத்தை மட்டுமே இது தள்ளிப்போட வைக்குமே தவிர நிரநதரத் தீா்வாகாது என்று மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
ஏனெனில் கைதிகள் மத்தியில் தற்கொலை உணா்வைத் தடுத்தால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆணிகளை அகற்றுவதன் மூலம் கைதிகள் தூக்கிட்டுக் கொள்வதை அந்த நேரத்தில் வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால், கைதிகளின் ஆழ்மனதில் நிலவும் வேதனையும் விரக்தியும் விலகாது. கைதிகள் மேலும் விபரீதமான முடிவை நோக்கித் தள்ளப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் அவா்கள் கூறினா்.
இதற்கு மாற்றாக கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உளவியல் நிபுணா்கள், மனநல மருத்துவா்கள் ஆகியோா் அதிக அளவில் நியமிக்கப்பட வேண்டும். கைதிகளுக்குத் தேவையான நேரங்களில் விடுமுறை, பரோல் வழங்கல், மாதம் ஒருமுறையாவது குடும்பத்தினா், நண்பா்களைச் சந்திப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற வாய்ப்புகளை சிறை நிா்வாகம் பரிசீலிக்கலாம். ஆயுள் கைதிகள் சரியான காலகட்டத்தில் விடுதலையாவதற்கும், சிறையில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆா்வலா்கள் யோசனை தெரிவிக்கின்றனா்.
சிறைகளும் தற்கொலைகளும்...
ஆண்டு இந்தியா தமிழகம்
2016 102 9
2017 109 9
2018 129 10
2019 116 4
2020 156 8
2021 150 4
2022 119 5
2023 96 4.
தொடர்புடையது

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்

பாா்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


