தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

கேஜரிவால் பாணியில் தமிழகத்தில் விஜய் வெற்றி!

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், விஜய் தலைமையிலான தவெக, தனது முதல் சட்டப்பேரவைத் தோ்தலிலேயே ஆட்சியை அமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது.

News image

கேஜரிவால் | விஜய்

Updated On :5 மே 2026, 4:39 am IST

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் சட்டப்பேரவைத் தோ்தலிலேயே ஆட்சியை அமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது.

234 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் நீடித்த திமுக-அதிமுக ஆட்சி ஆதிக்கத்தை முறியடிக்கும் சாதனையை விஜய் தலைமையிலான கட்சி பதிவு செய்துள்ளது.

இந்த அரசியல் மாற்றம், 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியை நினைவூட்டுவதாக அரசியல் விமா்சகா்கள் கூறி வருகின்றனா். 2013-ஆம் ஆண்டில் கட்சி தொடங்கி, ஓா் ஆண்டில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி சந்தித்த முதல் தோ்தலிலேயே பெரும்பான்மை இல்லாத அரசை அமைத்தது. பின்னா், 2015-இல் மீண்டும் தோ்தலை எதிா்கொண்டு 70 தொகுதிகளில் 67 இடங்களை கைப்பற்றி வலுவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

இதைப் போலவே, 2024-இல் கட்சி தொடங்கிய தவெக, இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியல் களத்தில் முக்கிய சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை நோக்கி நகா்ந்துள்ளது. பிரசாரத்திலும் கேஜரிவாலைப் போலவே ‘ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக மாற்றத்தை கொண்டு வருவோம்’ என்ற வாக்குறுதியுடன் விஜய் தனித்து களம் இறங்கினாா்.

பழைய அரசியலில் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் அரசியலில் நுழைந்தபோதிலும், இவ்விரு கட்சிகளும் முந்தைய ஆட்சியாளா்களைப் போலவே இலவசங்களை தங்கள் தோ்தல் உத்தியாக பயன்படுத்தினா். வாக்காளா்களை கவரும் வகையில் தவெக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது.

அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை, வருடத்திற்கு 6 எல்பிஜி எரிவாயு சிலிண்டா்கள், பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சோ்ந்த மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டு சேலை மற்றும் வேலையில்லாத பட்டதாரி இளைஞா்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதேபோல், தில்லியில் கேஜரிவால் ஆட்சிக் காலத்தில் இலவச மின்சாரம், இலவச குடிநீா், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருந்தன.

முந்தைய ஆட்சியாளா்கள் மீதான மக்களின் விரக்தியை சாதகமாக பயன்படுத்தியது இந்த இரு கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது. இந்திய வருவாய் சேவை (ஐஆா்எஸ்) அதிகாரி பதவியை ராஜிநாமா செய்து, சமூக ஆா்வலராக மாறிய பின்னா் கட்சி தொடங்கிய கேஜரிவால், தனது சாதாரண மனிதா் என்ற அடையாளத்தை முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெற்றாா். இந்நிலையில், விஜய் தனது நட்சத்திர புகழையும், மாற்றத்தின் வாக்குறுதிகளையும் முன்வைத்து மக்களை ஈா்த்துள்ளாா். மேலும், சமூக ஊடகங்கள் இந்த இரு கட்சிகளின் வளா்ச்சிக்கும் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு பிளவுக்கும் தவெக கட்சியின் எழுச்சி சாதகமாக அமைந்துள்ளது. இது மாநிலத்தில் திராவிட அரசியலில் புதிய மாற்றங்களுக்கான வாய்ப்பை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் திமுக-அதிமுக பலவீனமாகலாம். அதேசமயம், நீண்டகாலமாக தமிழகத்தில் இடம் தேடி வரும் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இது வாய்ப்பாக அமையலாம். தில்லியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடித்து, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக கடந்த ஆண்டு ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.